புதுச்சேரி : தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் அகற்றப்படாத காய்கறி கடைகளால் தினமும் ஆக்கிரமிப்பு கடைகள் புதிதாக உருவாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, சிறிய இடத்தில் செயல்பட்ட பெரிய மார்க்கெட், கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய பஸ் நிலையம், லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி உட்பட 5 இடங்களில் பிரித்து, தற்காலிகமாக இயங்கின.பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை மாதம் 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்திய போது மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு அனைத்து மொத்த, சில்லறை காய்கறி கடைகள் மாற்றப்பட்டன. ஆனால் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி மைதானத்தில் 5 காய்கறி கடைகள் மட்டும் காலி செய்யாமல் அங்கேயே இயங்குகின்றன. இந்த கடைகளை அகற்றாததால், அதன் அருகிலேயே தினமும் புதிதாக கடைகள் உருவாகின்றன.
இரவு நேரங்களில் தள்ளுவண்டி கடைகளும் வரத் துவங்கின.மேலும் முருகா தியேட்டர், இ.சி.ஆர் பஸ் நிறுத்தம் முதல் கொக்குபார்க் சிக்னல் வரையிலும், 10 கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன.இது தொடர்ந்தால் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி மைதானம் முழுதும் ஆக்கிரமிப்பு கடைகள் நிரந்தரமாகி, சில நாட்களிலேயே மின்சாரம் வாங்கி இடத்திற்கு சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.அதன் பிறகு 10 கடைகள் தோன்றியதும், சங்கமும் உருவாகி, அரசால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள, அனைத்து காய்கறி வியாபாரிகளும் பெரிய மார்க்கெட்டிற்கு வந்து விட்டனர். இவர்கள் பெரிய மார்க்கெட்டிலும், தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியிலும் கடைகளை திறந்து வைத்து ஒரே நேரத்தில் வியாபாரம் செய்கின்றனர்.இவ்விவகாரத்தில் உழவர்கரை நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து, காய்கறி கடைகளை அகற்றி, விவசாயிகள் விளை பொருட்களை கமிட்டிக்கு கொண்டுவர போதுமான இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE