விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ரயில்வே சுரங்க பாதையில், தேங்கி நிற்கும் தண்ணீரை நிரந்தரமாக வெளியேற்ற மோட்டார் அமைக்கப்படுவதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி - எருமனுார் சாலையின் குறுக்கே செல்லும், விருத்தாசலம் - சேலம் ரயில் பாதையில் இருந்த ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி, கடந்த 2013ம் ஆண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மேலே உள்ளதால், சுரங்கப்பாதையில் ஊற்று ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நின்றதால், கடந்த எட்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும், அருகில் உள்ள ஓடைப்பாலத்தை மாற்று பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், மழைக்காலங்களில் மாற்றுப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றால், இருசக்கர வாகன ஓட்டிகள், ஒன்னரை கிலோமீட்டர் துாரம் உள்ள எருமனுார் கிராமத்திற்கு 13 கி.மீ., சுற்றிச் செல்லும் நிலை இருந்தது.இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், சுரங்கப்பாதைக்கு நிரந்தர தீர்வு காண, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கோரிக்கை குறித்து, ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.அதையடுத்து, ரயில்வே நிர்வாகத்தினர் தற்போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி, நிரந்தர மோட்டார் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு ஏற்பட உள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE