புதுச்சேரி : அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,200 பணியிடங்களை நிரப்ப விடாமல் கவர்னர் தடுக்கிறார் என காங்., மாநில தலைவர் ஏ.வி.,சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை;மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு மற்றும் அமைச்சரவை உள்ள போது, அரசின் அன்றாட அலுவல்களில், கவர்னர் தலையிடக்கூடாது. கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மாறுபட்ட கருத்து இருந்தால், அழைத்து பேசவேண்டும். திருப்தி இல்லை என்றால், அந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.ஆனால் கவர்னர், அழைத்து பேசாமல், திட்ட கோப்புகளை நிராகரிக்கிறார் அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி விடுகிறார்.
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,200 பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.ரூ.1,500 கோடி் மதிப்புடைய, அரசுக்கு சொந்தமான மின் துறையை கார்ப்பரேட்டு களுக்கு தாரை வார்க்க விரும்புகிறார். மாநிலத்தில், 33 இடங்களில் போர் போட்டு, ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கி, நமது விளைநிலங்களை பாலைவனமாக்க முயற்சி செய்கிறார்.தமிழகத்தை போன்று புதுச்சேரி அரசும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க விரும்புகிறது. அனுமதி கொடுக்காமல் தாமதம் செய்கிறார். இது போன்று பல வகையிலும் புதுச்சேரி மக்களுக்கு எதிராக செயல்படும் இவரை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை நாம் போராடுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE