விழுப்புரம : தஞ்சாவூரில் நடக்கும் ஓவிய- சிற்ப கலைக் காட்சிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், ஓவிய சிற்ப கலையை வளர்திடும் நோக்கிலும், அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓவிய- சிற்ப கலைக் காட்சி நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலை பண்பாட்டுத் துறை சார்பாக ஓவிய சிற்பக் கலைக் காட்சி தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட தஞ்சாசூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓவிய படைப்புகளைப் பெற்று கலைக்காட்சி நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் ஓவியர்கள் தங்களது மரபு வழி மற்றும் நவீன பாணி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங் மற்றும் வாட்டர் கலர் பெயிண்டிங் படைப்புகள் மற்றும் சிற்பங்களை முறையாக தனி நபர் கண்காட்சி வைத்து தங்களது படைப்புகளை சந்தைப் படுத்தவும், ஓவியக் கலையில் ஆர்வமிக்க பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடத்தப்படவுள்ளது.தங்களது கலைப் படைப்புகளை தேர்வு செய்வதற்கு மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநரால் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட உள்ளது.
கண்காட்சியில் முதல் பரிசு ரூ.3,500- வீதம் 10 ஓவியக்கலைஞர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.2,500 வீதம் 10 கலைஞர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.1,500- வீதம் 10 ஓவியக் கலைஞர் களுக்கு காசோலையாக வழங்கப்பட்டவுள்ளது.எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியப் படைப்புகளை தனி நபர் கண்காட்சியாக வைத்திட தன்விவரக் குறிப்பு மற்றும் படைப்புகள் எண்ணிக்கை விவரங்களுடன் நாளைக்குள் ( 5ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.
படைப்புகளை உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், நீதிமன்றச் சாலை,தஞ்சாவூர்- 613 001, தொலைபேசி எண்: 0436 2-232252, 94449 49739, 94425 07705 ஆகிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE