புதுடில்லி : டில்லியில், தமிழகத்தின் கலை மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமாக, தமிழுக்கான அகாடமியை, ஆம் ஆத்மி அரசு நிறுவியுள்ளது.
டில்லியில், மாநில துணை முதல்வரும், கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழுக்கான அகாடமி, நேற்று நிறுவப்பட்டது.
இந்த அகாடமிக்கு, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும், டில்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினருமான என்.ராஜா, துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அகாடமிக்கு, அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன், கட்டடம் மற்றும் அலுவலகமும் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிஷ் சிசோடியா கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் டில்லி, கலாசார ரீதியில் வளமான நகரமாக விளங்குகிறது. டில்லியில் வாழும் தமிழக மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். எனவே தமிழகத்தின் கலை மற்றும் கலாசாரத்தைப் பற்றி, டில்லி மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில், இந்த அகாடமியை நிறுவியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, ராஜா கூறுகையில், “தமிழ் மொழிக்காக, இங்கு அகாடமி நிறுவப்பட்டுள்ளதற்கு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இதில் அங்கம் வகிப்பதை, கவுரவமாக கருதுகிறேன்,” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE