புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்த, 7,000 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 185 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தீவிர சோதனை
நாடு முழுதும் ஒரே சீரான வரி முறையான, ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, சாதனை அளவாக, கடந்த டிச., மாதத்தில், 1.15 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய நிதிச் செயலர் அஜய் பூஷண் பாண்டே கூறி உள்ளதாவது:
ஜி.எஸ்.டி., முறையில் பல மோசடிகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தடுக்கும் வகையில், கடந்த சில மாதங்களாக தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. அதில், போலி பில்கள் தயாரிப்பது அதிகளவில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.,யின் கீழ், 1.20 கோடி பேர், பதிவு செய்துள்ளனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக, 7,000 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக, 185 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வருமான வரி, சுங்க வரி உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரி வசூல்
ஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்வோர், வருமான வரி ஏய்ப்பும் செய்வர் என்பதால், ஜி.எஸ்.டி., சோதனை நடந்த இடங்களில், வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகளும் சோதனை மேற்கொள்ள உள்ளன. எந்த வகையிலும், வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தற்காலிகமாக வேண்டுமானால் தப்பிக்கலாம்.

ஆண்டு விற்று முதல், 500 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிறுவனங்கள், மின்னணு பில்களை மட்டுமே பயன்படுத்துவது, கடந்தாண்டு, அக்டோபரில் கட்டாயமாக்கப்பட்டது. வரும், ஏப்., முதல், 55 கோடி ரூபாய் விற்று முதல் உள்ள நிறுவனங்களுக்கு இது கட்டாயமாக்கப்பட உள்ளது.
இவ்வாறு கடும் கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் எடுத்ததாலேயே, டிச., மாத வரி வசூல் அதிகரித்துள்ளது. வரி வசூல் அதிகரிப்பது, பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE