ஐதராபாத்: ''ஆந்திராவில், ஹிந்து கோவில்கள் சேதப்படுத்தப்படுவதும், ஹிந்து கடவுள்கள் இழிவுப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. ''விஷமிகள் மீது, நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் ஜெகன்மோகன் மவுனம் காத்து வருகிறார்,'' என, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள விஜயநகரம் மாவட்டத்தில், 400 ஆண்டுகள் பழமையான, ராமதீர்த்தம் கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் உள்ள ராமர் சிலையை, விஷமிகள் சிலர், சமீபத்தில் சேதப்படுத்தினர். இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ராமதீர்த்தம் கோவிலுக்கு, தன் தொண்டர்களுடன் நேற்று முன் தினம் சென்றார். கோவில் பூட்டப்பட்டு இருந்ததால், பணியாளர்களிடம், சேதம் குறித்து கேட்டறிந்தார்.

இதன்பின் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கடந்த, 18 மாதங்களில், ஆந்திரா முழுதும் உள்ள, 127 கோவில்கள் மற்றும் சுவாமி சிலைகள், விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஜெகன்மோகன் கிறிஸ்துவர் என்பதற்காக, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மத மாற்றத்தில் ஈடுபடக் கூடாது. அப்படி செய்வது, ஹிந்துக்களுக்கு துரோகம் இழைப்பதாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
குற்றஞ்சாட்டினர்
இதற்கிடையே, முதல்வர் ஜெகன் மோகன் மீது அவதுாறு பரப்பும் நோக்கத்தில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோரின் ஆதரவாளர்கள், கோவிலில் தாக்குதலில் ஈடுபட்டதாக, ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE