அரூர்: கல்லாற்றில், வீணாக செல்லும் உபரி நீரை, அரூர் பெரிய ஏரிக்கு கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் பெரிய ஏரி, 160 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த ஏரி நிரம்புவதன் மூலம், அரூர் நகரில், குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். மேலும், எச்.தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி, நாச்சினாம்பட்டி, நம்பிப்பட்டி உள்ளிட்ட, சுற்று வட்டார பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது. இந்த ஏரிக்கு தேவையான நீர், வாணியாறு அணையிலிருந்து வருகிறது. இந்நிலையில், வாணியாறு அணையிலிருந்து வரும் உபரி நீரை, அரூர் பெரிய ஏரிக்கு கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: வாணியாறு அணையிலிருந்து வரும் உபரிநீர் மூலம், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், பறையப்பட்டி புதூர், ஓந்தியாம்பட்டி, தென்கரைகோட்டை ஆகிய, ஐந்து ஆயக்கட்டு ஏரிகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. தற்போது, தென்கரைகோட்டை ஏரியிலிருந்து வரும் உபரி நீர், கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் நிரம்பி, அங்கிருந்து, வீணாக கல்லாற்றில் செல்கிறது. எனவே, காரைஒட்டு தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, வீணாக்காமல், அரூர் பெரிய ஏரிக்கு கொண்டு வர, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, வாணியாறு அணை ஆயக்கட்டுவில், அரூர் பெரிய ஏரியை சேர்க்கக்கோரி, பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE