திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், விஸ்வ பிராமண சத்திரத்தை கைப்பற்றுவதில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை, தேரடி வீதியில், விஸ்வ பிராமண சத்திரம் உள்ளது. இதன், சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆக., 19ல் முடிவடைந்தது. நிர்வாகிகள் ஊழலில் ஈடுபட்டதால், அவர்களை தொடர்ந்து பதவியில் இருக்க எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படும் வரை, இடைக்கால தலைவராக சுப்பிரமணி என்பவரை தேர்வு செய்தனர். நேற்று, சங்க நிர்வாகிகள் தேர்வு குறித்தும், சங்க வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த, அவசர பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இடைக்கால குழு தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்க, பழைய நிர்வாகிகள் மறுத்தனர். இதனால் அங்கு, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பழைய நிர்வாகிகள் விஸ்வ பிராமண சத்திரத்துக்கு பூட்டு போட்டு சென்றனர். இதனால், இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுப்பிரமணி ஆதரவாளர்கள், தேரடி வீதியில் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை டவுன் போலீசார், அவர்களை சமாதானம் செய்து, மறியலை கைவிட செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE