திருவாரூர்: இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் அவளிவநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: பெண்கள் முன்னேற்றத்திற்கு, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, பல திட்டங்களை கொண்டுவந்தார். கடந்த, 1989ல் சொத்தில், பெண்களுக்கு சம உரிமை என்ற சட்டத்தை இயற்றினார். மறைந்த பிரதமர் ராஜிவ் கொண்டு வந்த சட்டத்தில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இச்சட்டத்தை, இந்தியாவில், தமிழகத்தில் தான் முதலாவதாக கருணாநிதி அமல்படுத்தினார்.

இன்னும், நான்குமாதம் தான். ஆட்சிமாற்றம் வரப்போகுது. நாங்க ரெடி, நீங்கள் ரெடியா? இந்த ஆட்சியில், அக்கிரமம், அநியாயம் நடந்துவருகிறது. இருக்கும் நான்கு மாதங்களில், கொள்ளையடித்துவிட வேண்டும் என, செயல்படுகின்றனர். விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் கொண்டுவந்தது தி.மு.க., ஆட்சியில் தான். விவசாயிகளின், 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன்களை ரத்து செய்தது தி.மு.க., ஆட்சியில் தான். பச்சை துண்டுபோட்டால், விவசாயி என, முதல்வர் பழனிச்சாமி நினைக்கிறார். அவர், பச்சை துரோகி. விவசாயிகளை கேவலபடுத்துகிறார்.

டில்லியில் போராடும் விவசாயிகளை பற்றி மத்திய அரசு கவலைபடவில்லை. மத்திய அரசு கொண்டுவந்துள்ள, வேளாண்சட்டங்களை எதிர்த்து, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், தமிழக அரசு ஆதரவு கூட தெரிவிக்கவில்லை. இந்த ஆட்சி இருந்து என்ன பயன்.
கடந்தமுறை, ஆட்சிக்கு வரும் முன், வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என, பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், 15 பைசா கூட செலுத்தவில்லை. அதேபோல், 20கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, கூறினார். அதுவும், நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசுக்கு, அடிமை சேவகனாக, முதல்வர் பழனிச்சாமி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE