சேலம்: லஞ்சத்தை மக்கள் கொடுக்காமல் இருந்தால் லஞ்சம் ஒழியும் என மக்கள் மீது பழிபோடுவது நேர்மையற்ற கோழைத்தனம் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு குரல் கொடுத்து வந்த பத்மபிரியா இணைந்தார். அவருடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 7 அம்ச வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில், சுழற்சி பொருளாதாரத்தை நிறுவுதல், மாசுபாட்டின் தரங்களை கண்காணித்தல் மற்றும் செயல்படுத்துதல், கடுமையான நிலத்தடி நீர் கட்டுப்பாடு, மாநிலம் தழுவிய சுற்றுச்சூழல் நிலப்படம் உருவாக்குதல், நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் முன்னேற்றம், உள்ளூர் மக்களின் பங்கேற்பை உறுதி செய்தல், உயிர்ச்சூழல் அமைப்புகள் பாதுகாப்பு ஆகியவை இடம்பெற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது: ஏரி, கண்மாய்கள் எல்லாம் நமது சொத்துகள். அவற்றை மாசுப்படுத்துபவர்களை தண்டிக்க வேண்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், பாதாள சாக்கடை இல்லாமல் திறந்தவெளி சாக்கடையாக தான் உள்ளது. தவிர, குப்பைகள், நெகிழி தான் அதிகமாக உள்ளது. இதனை நாங்கள் ஆட்சிக்கு வந்தப்பின் போக்குவதற்கான திட்டங்கள் உள்ளன. லோக்சபா சட்டத்தின் பற்களை பிடுங்கியுள்ளனர். அதன் பற்களை கட்டினால், அதிகாரிகள் தவறு செய்யமாட்டார்கள்.

லஞ்சத்தை மக்கள் கொடுக்காமல் இருந்தால் லஞ்சம் ஒழியும் என மக்கள் மீது பழிபோடுவது நேர்மையற்ற கோழைத்தனம். லஞ்சம் பெறாமல் நேர்மையாக பணி புரிவது மேலிருக்கும் அதிகாரிகளின் கடமை. தலைமை சரியாக இருந்தால் நேர்மை மக்களிடையே வாழ்வுரிமையாக சேரும். சுற்றுச்சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மையம் என்றால் மிகையல்ல. சுற்றுச்சூழல் சரித்திரம் மாறினால் மனித சரித்திரம் மாறும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றினால் தான் நடக்கும். இந்த நல்ல திட்டங்கள் நல்லவர்கள் செய்ய வேண்டும். இவர்கள் (அதிமுக, திமுக) கையில் கொடுத்தால் நல்லது நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தால் அரசுக்கு செலவு, மக்களுக்கு லாபம். இது மட்டுமே நிகழுமே தவிர இது அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE