பாட்னா :பீஹாரில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 'அக்கா உணவகம்' என்ற பெயரில், மலிவு விலை உணவகங்களை திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 'தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல், அரசு மருத்துவமனைகளில், மலிவு விலையில் உணவு வழங்க, 'தீதி கி ரசோய்' எனப்படும், அக்கா உணவகம் திறக்கப்படும்' என, தே.ஜ., கூட்டணி, பீஹார் சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, வைஷாலி மாவட்ட மருத்துவமனையில், மாநிலத்தின் முதல், அக்கா உணவகம் திறக்கப்பட்டது. முற்றிலும் பெண்களாலேயே, இந்த உணவகம் நடத்தப்படுகிறது.
இந்த உணவகத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து, மேலும் ஆறு மாவட்ட மருத்துவமனைகளில் அக்கா உணவகம் திறக்கப்பட்டது.இந்நிலையில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அக்கா உணவகம் திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, பீஹார் அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மாவட்ட மருத்துவமனைகள் அனைத்திலும் அக்கா உணவகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவது ஒரு சவாலாகவே உள்ளது. அக்கா உணவகம் திறக்கப்பட்ட மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு மலிவு விலையில், தரமான உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE