காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்: அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களை சந்திப்பது இயல்பு. அதேபோன்று தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்களை சந்தித்து நடத்தும் கிராம சபை கூட்டத்தில், அ.தி.மு.க.,வினர் சர்ச்சையை உருவாக்குகின்றனர்.
'டவுட்' தனபாலு: அப்படியானால், தி.மு.க., நடத்தும் மக்கள் கிராம சபை போல, உங்களின் கட்சியான காங்., உங்களின் தோழமை கட்சியான கம்யூ.,க்கள், சிறுத்தைகள் போன்றவை ஏன் நடத்தவில்லை; அப்படி நடத்தினால் தானே, உண்மையான மக்கள் குறைகேட்பு கூட்டங்களாக இருக்கும்... தி.மு.க., கண்டிக்கும் என்ற பயமோ என்ற, 'டவுட்' வருதே!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத நிலையில், மினி கிளினிக்குகள், எவ்வாறு செயல்பட முடியும்... இதைத்தான், அரசிடம் கேட்டேன். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ ஊழியர் குறித்து கேட்டால், மினி கிளினிக்கை கை காட்டுகின்றனர். மினி கிளினிக் மருத்துவ ஊழியர் குறித்து கேட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்தை கை காட்டுகின்றனர். இது, கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடியாக உள்ளது.
'டவுட்' தனபாலு: ஆளும் அரசு தரப்பில் செய்யப்படும் எல்லாமே அரசியலுக்காகவும், வரவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காகவும் தான் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல, அதை கண்டித்து நீங்கள் பேசுவதும், தேர்தலை குறி வைத்தே என்பதில், யாருக்கும், 'டவுட்'டே வராது!
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தொடர்ச்சியாக ஒரு பொய்யை கூறி வருகிறார். 'யூனியன் பிரதேசமான புதுச்சேரியை, அண்டை மாநிலத்தோடு இணைத்து விடுவர்' என கூறுகிறார். மத்திய உள்துறை இணையமைச்சர் என்ற முறையில், உங்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். புதுச்சேரி என்றும், யூனியன் பிரதேசமாகவே தொடரும். பொய் சொல்லும் நாராயணசாமிக்கு தகுந்த பாடத்தை தேர்தலில் புகட்டுங்கள்.
'டவுட்' தனபாலு: நாராயணசாமி தான் அப்படி சொல்கிறார் என்றால், நீங்களும், 'புதுச்சேரி எப்போதும் மாநிலமாகாது, யூனியன் பிரதேசமாகவே தொடரும்' என்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருதே. ஆங்கிலேயர் தவிர்த்து, பிரெஞ்சு நாட்டினர் ஆளுகையில் இருந்ததால், அதை இப்போதும் நினைவுபடுத்தும் வகையில், யூனியன் பிரதேசமாகவே தொடரத் தான் வேண்டுமா என, நடுநிலையாளர்கள் கேட்கின்றனரே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE