சட்டசபையில் காமெடி அரங்கேறும்!
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காலஞ்சென்ற கருணாநிதியின் மகனும், தற்போதைய, தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், இன்னும் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்ளவில்லையே தவிர, மற்றபடி தான் முதல்வராகி விட்டதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்.ஆனால், முதல்வர் பதவியில் அமர்ந்து நாட்டை நிர்வகிக்கும் திறன், அவரிடம் உள்ளதா என்று ஆராய்ந்தால், அன்னாரது தகுதி, 'ஜீரோ' என்ற அளவிலேயே உள்ளதாக தோன்றுகிறது.இதுவரை இலைமறை காய்மறையாக இருந்த அந்த, 'திறமை' சமீபத்தில் நடந்த கோவைக் கூட்டத்தில், வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.துண்டுச் சீட்டை பார்த்து, பொதுக் கூட்ட மேடையில் பேசி விடலாம். அப்போதும் தப்பும், தவறுமாகத் தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது, வேறு
நெருடும் விஷயம்.அதை, அவரது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், சட்டசபையில் முதல்வராக அமர்ந்த பின், அப்படி பேசினால் எடுபடாது.சபையில், உறுப்பினர்கள் கேள்வி கேட்டால், சட்டென்று எழுந்து, அதற்கு தெளிவான பதில் அளிக்க வேண்டும்.அவரது உதவியாளர்கள் எப்போது பதிலை தயார் செய்து, அதை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, சபையில் இவரிடம், 'பாஸ்' செய்வதற்குள், அலுவல் நேரமே முடிந்து விடும்.
தவிர, கேள்வி கேட்ட உறுப்பினரைப் பார்த்து, 'நீ வேலுமணி ஆளா? தங்கமணி ஆளா? வீரமணி ஆளா?' என விபரம் கேட்டுக் கொண்டிருந்தால், சந்தி சிரித்து விடும்; சபையின் மானம் கப்பலேறிவிடும்.மேலும், 10 ஆண்டுகளாக, சட்டசபையில் வந்து அமர்ந்தது, சபையின் அலுவல் துவங்கியதும், ஏதாவது ஒரு காரணம் கூறி, வெளி நடப்பு செய்வது, ஸ்டாலினுக்கும், தி.மு.க., உறுப்பினர்களுக்கும் வாடிக்கையாகி விட்டது.
'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்' என்றொரு சொலவடை, தமிழில் உண்டு.அந்த பழக்க தோஷத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாராவது கேள்வி கேட்டால், கேள்விக்கு பதில் அளிக்க முன் வராமல், சட்டென்று தன் அமைச்சரவை சகாக்களுடன் வெளி நடப்பு செய்யும் சாத்தியக் கூறு உண்டு.சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., வென்று ஆட்சியில் அமர்ந்தால், இது போன்று இன்னும் ஏராளமான நகைச்சுவை நிகழ்ச்சிகளும், காமெடி சம்பவங்களும் அரங்கேற வாய்ப்பு உண்டு.முதல்வர் வேட்பாளராக இருப்பவர், அதற்குறிய பேச்சு, செயல் போன்றவற்றில், தன் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கல் வீசிபார்க்காதீர்!
க.சிவசு, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், சில நாட்களுக்கு முன் நடத்திய போராட்டத்தில் பங்கு பெற்ற, பேராயர் எஸ்ரா சற்குணம் பேசியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.வேளாண் சட்டத்தைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, பிரதமர் மோடியின் தனிப்பட்ட குடும்ப விஷயத்தை, அங்கு பேசி இருக்கிறார். கருணாநிதிக்கு எத்தனை மனைவியர் என்பது, அவருக்கு தெரியுமா?'ஹிந்து என்ற மதமே கிடையாது; இங்குள்ள அனைவரும் கிறிஸ்துவரே. யாராவது ஹிந்து என்று சொன்னால், அவர்களது மூக்கில் குத்துங்கள்; ரத்தம் வரட்டும்' என, எஸ்ரா சற்குணம் பேசியுள்ளார்.இவரா, அன்பையும், கருணையும் போதிக்கிற கிறிஸ்துவ மத போதகர்? இந்நாட்டில், ஹிந்துக்கள், 80 சதவீதம் பேர் உள்ளோம். நாங்கள் பதிலுக்கு, மூக்கில் குத்தினால் என்னவாகும்? இந்நாட்டில் ரத்த ஆறு ஓட வேண்டும் என, எஸ்ரா சற்குணம் திட்டமிடுகிறாரா?ஹிந்து மீது, அவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்றால், சில மாதங்களாக, யாரும் மதம் மாறி ஞானஸ்தானம் பெறவில்லையாம். மத மாற்ற பிரசாரத்திற்கு, பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விதிமுறை மீறி செயல்பட்ட, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, என்.ஜி.ஓ.,க்களின் அனுமதியை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் அவை, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.அதன் விரக்தியின் வெளிப்பாடு தான், எஸ்ரா சற்குணத்தில் அநாகரிக பேச்சு.எங்கள் இனிய கிறிஸ்துவ நண்பர்களே... உங்கள் மத பேராயர் எஸ்ரா சற்குணத்தின் பேச்சுக்கு, நாங்கள் பதிலடி அளித்தால், நீங்கள் மனம் வருந்துவீரோ என, நாங்கள் பொறுமையாக
இருக்கிறோம்.இயேசு கிறிஸ்து பிறப்பு முதல் இறப்பு வரையில், அவர் மீதான விமர்சனங்கள் ஏராளம் உள்ளன என்றாலும், நாங்கள் அவர் மீது மரியாதையும், அன்பும் வைத்திருக்கிறோம். அதை கெடுப்பதால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.ஹிந்துக்களிடம் இருக்கும் சகோதரத்துவம், சகிப்புத்தன்மை மீது கல் வீசி பார்க்க வேண்டாம். அது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லது அல்ல!
தலைவர்கள்தேவை இல்லை!
பி.கந்தசாமி, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முகமது பின் துக்ளக் படத்தில், பிரதமராக இருக்கும் சோ, துணை பிரதமராக ஒருவரை அறிவிப்பார். அந்த பதவி கிடைக்காத மற்ற, எம்.பி.,க்கள், ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டுவர். உடனே சோ, அனைவரையும் துணை பிரதமராக அறிவித்துவிடுவார்.அந்த படத்தில் நடந்த கூத்து தான், இப்போது, தமிழக காங்கிரசில் நடக்கிறது.சமீபத்தில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக, 32 பேர்; பொதுச் செயலராக, 57 பேர்; மாநில செயலராக, 104 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோஷ்டிப் பூசலை தவிர்த்து, அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற எண்ணம், தலைமைக்கு இருக்கலாம்.ஆனால், இந்த பதவிகள் அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை. ஏற்கனவே வலுவான, தேசிய தலைமை இல்லாமல் பலவீனப்பட்டுக் கிடக்கும் காங்கிரசுக்கு வலு சேர்க்க, இந்த முயற்சி எவ்வகையிலும் பலனளிக்காது.
சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் எதிர்மறை விமர்சனங்களுக்கு மட்டுமே, இந்த பதவி நிரப்பல் வழிவகுக்கும்.தமிழக காங்கிரசின் இப்போதைய தேவை, உறுதியான தலைமை மட்டுமே. இதை விடுத்து, எல்லா கோஷ்டிகளையும் திருப்திபடுத்துவது என களமிறங்கினால், தமிழக காங்கிரஸ் இன்னும் பல கோஷ்டிகளாகத் தான் சிதறும். மேலும் இன்றைய தமிழக காங்கிரசுக்கு, தலைவர்கள் தேவையில்லை; தொண்டர்கள் மட்டுமே தேவை என்பதை, மேலிடம் புரிந்து கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE