தரகு தொழிலில் கலக்கும் போலீஸ் அதிகாரிகள்!
''பல குளறுபடிகள் நடந்திருக்குன்னு குமுறிட்டு இருக்காவ வே...'' என, சுக்கு காபியை சுவைத்தபடியே, வாயை திறந்தார் அண்ணாச்சி.
''எங்க, என்னங்க குளறுபடி...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரை ஆவின்ல, 62 பணியிடங்களை நிரப்ப, 2,500 பேருக்கு தேர்வு நடந்துச்சு... இதுல, குறிப்பிட்ட சிலரை மட்டுமே நேர்காணலுக்கு அழைச்சதா சொல்லுதாவ வே...
''அதோட, பொது மேலாளர் தலைமையில அமைக்கப்பட்ட நேர்காணல், 'பேனல்'ல, 10 வருஷத்துக்கு மேல அனுபவம் இருக்கிறவங்களை விட்டுட்டு, போன வருஷம் சேர்ந்தவங்களை எல்லாம் போட்டதா சொல்லுதாவ...
''இதுக்கு இடையில, 'கீ ஆன்சர்' வெளியிடும்படி, கோர்ட்டே உத்தரவு போட்டுட்டு... அது வெளியானா, இன்னும் பல தில்லாலங்கடிகள் வெளியே வரும்னு, தேர்வர்கள் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பதவி பறிப்புல இருந்து தப்பிட்டாருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், வட சென்னை மாவட்ட பா.ஜ., நிர்வாகியின் உறவினரும் நண்பர்களா பழகியிருக்காங்க... தன் உறவினருடன் பழக்கத்தை கைவிடும்படி, பா.ஜ., நிர்வாகி, இளம்பெண் வீட்டுக்கு போய், அவரை அடிச்சு உதைச்சிருக்காருங்க...
''இதை வேடிக்கை பார்த்தபடியே, சினிமா கதாசிரியர் ஒருத்தர், தன் மொபைல் போன்ல பேசிட்டு போயிருக்கார்... அவரை மடக்கிய பா.ஜ., நிர்வாகி, 'எங்களை வீடியோ எடுக்குறியா'ன்னு கேட்டு, மொபைல் போனை பறிச்சிட்டாருங்க...
''அவர், விருகம்பாக்கம் போலீஸ்ல புகார் குடுக்க, பதறிப் போன பா.ஜ., நிர்வாகி, சமரசம் பேசி, வழக்கு பதிவாகாம பார்த்துக்கிட்டாருங்க... 'அவர் மேல வழக்கு பதிவாகியிருந்தா, கட்சி பதவியை பறிக்கிற முடிவுல தலைமை இருந்தது... நல்லவேளை தப்பிட்டார்'னு, அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''பாலாஜி இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணா, ''வேலையை செய்யாம, தொழில் பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஈரோடு மாவட்டத்துல, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ்ல அதிகாரிகளா இருக்கற பலர், பக்கத்து மாவட்டங்கள்ல இருந்து தான் இங்க வரா... அப்படியே வந்தாலும், ஆர்ப்பாட்டம், வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு பணின்னு, கேட்டு வாங்கிண்டு போயிடறா ஓய்...
''இதுல சிலர், நிலம், வீடு வாங்கி விற்கறதுன்னு தரகு தொழிலும் பார்க்கறா... இதனால, ஜாதி சான்று, கல்வி சான்று சம்பந்தமான துறை ரீதியான விசாரணைக்கு, கீழ்மட்ட போலீசாரை, தாசில்தார், சி.இ.ஓ., ஆபீஸ்களுக்கு அனுப்பி வைக்கறா...
''அவாளோ, 'உங்க அதிகாரியை வரச் சொல்லுங்கோ'ன்னு திருப்பி அனுப்பிடறா... இதனால, மனித உரிமை பிரிவு போலீசார் மண்டை காய்ஞ்சு கிடக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.பெஞ்சுக்கு வந்தவரை நிறுத்தி, ''வாங்க சண்முகம்... ஊருல, கவிதா, தமிழ்ச்செல்வன் எல்லாம் சவுக்கியமா வே...'' என, அண்ணாச்சி, 'பழக்கம்' பேச, மற்றவர்கள் நடையை கட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE