புதுடில்லி,:''உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் விரைவில் துவங்க உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.
கொரோனா வைரசை ஒழிக்க, இரண்டு தடுப்பூசிகளை, அவசரகாலத்துக்கு பயன்படுத்த, மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. டில்லியில் நேற்று நடந்த, தேசிய அளவியல் மாநாட்டில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பெருமை
அப்போது அவர் பேசியதாவது:உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கம், நம் நாட்டில் விரைவில் துவங்க உள்ளது. இதை சாத்தியமாக்கிய, நம் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்களால், நாடு பெருமைபடுகிறது. தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி, இந்தியாவிலேயே இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதுடன், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். எண்ணிக்கையை விட, தரமே முக்கியம். உள்நாட்டில் விற்றாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக இருந்தாலும், இந்திய பொருட்கள் தரமானவை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதிகரிப்பு
உலகெங்கும் இந்திய பொருட்களை குவிக்க வேண்டும் என்பது, நம் நோக்கமல்ல. ஆனால், உலகின் எந்த மூலையாக இருந்தாலும், இந்திய பொருட்களை பயன்படுத்துவோர் திருப்தி அடைய வேண்டும்.அறிவியல் வளர்ச்சி பெறும் நாடுகள் தான், மிகச் சிறந்த வளர்ச்சியை காண்கின்றன. அறிவியல், தொழில்நுட்பம், தொழில்துறை என்பவை, ஒரு சுழற்சியை உடையவை. அறிவியலால், தொழில்நுட்ப வளர்ச்சி கிடைக்கிறது. அதனால், தொழில்துறையில் உற்பத்தி அதிகரிக்கிறது. மேலும் வளர்ச்சியை காண்பதற்காக, தொழில்துறை, அறிவியலில் முதலீடு செய்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
'மோடிக்கு முதல் தடுப்பூசி!'
இரண்டு தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அரசியல் விவாதமும் துவங்கிவிட்டது. 'மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவதற்கு முன்பாகவே, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் தடுப்பூசிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது' என, காங்., ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளது.இந்நிலையில், பீஹாரைச் சேர்ந்த, காங்., - எம்.எல்.ஏ., அர்ஜீத் சர்மா கூறியுள்ளதாவது:கொரோனாவுக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது நல்ல செய்தி தான். ஆனால், இதில் சில சந்தேகங்கள் உள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் ஆகியோர், பொது நிகழ்ச்சியில், தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.
அதுபோல, பிரதமர் நரேந்திர மோடி, முதலில் தடுப்பூசி எடுத்துக் கொண்டு, சந்தேகங்களை தீர்க்க வேண்டும். பா.ஜ., மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்களும், தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளதற்கு, பா.ஜ., பெருமை தேடிக் கொள்ள முயற்சிக்கிறது. இந்த நிறுவனங்கள், காங்., ஆட்சியில் தான் அமைக்கப்பட்டன. அதனால், காங்கிரசுக்கும் இதில் பெருமை உள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE