எல்லா கட்சிகளிலும் வாரிசு அரசியல் அவலம் இருந்தாலும், அது தி.மு.க.,வில் மிக அதிகமே. தலைவராக இருந்த கருணாநிதியின் நேரடி வாரிசுகள், உறவினர்கள், இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்களின் வாரிசுகள் என அந்த கட்சியில் எம்.பி., - எம்.எல்.ஏ., அமைச்சர்கள் என பதவிகளை, 'வாங்கி' கொண்டவர்கள் ஏராளம்.
அப்படி 'வாரிசு அரசியலின் பிம்பமாக' வந்த, கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தான் இன்று, 'இன்னொரு வாரிசு' ஸ்டாலினை, 'முதல்வராக விடமாட்டேன்' என பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார். காலம் கனிந்து வருகிறது; முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடிக்க இன்னும் நான்கு மாதம் தான் என கனவோடு இருக்கும் ஸ்டாலினுக்கு, அழகிரி தந்திருப்பது ஒரு சவால் தான்!
உட்கட்சி அரசியல்
ஜன., 3ல் மதுரையில் ஆதரவாளர்களிடையே பேசிய அழகிரி, இப்படி பேசியதன் பின்னணியில் தான் புறக்கணிக்கப்பட்டது, அவமானப்படுத்தப்பட்டதன் வலியை நன்றாகவே வெளிப்படுத்தினார். 'கட்சிக்கு நான் என்ன துரோகம் செய்தேன்' என்றும் கேட்டார். கட்சி துவங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும், இன்றைய அரசியல் நிலை குறித்தும் ஆதரவாளர்களின் ஆலோசனைகளை கேட்ட அழகிரி, பின் மேடையில் பேசிய தி.மு.க., உட்கட்சி அரசியல் எல்லாம், 'அக்மார்க்' ரகம்!'தி.மு.க., வளர்ச்சிக்கு நான் எப்படி உதவினேன்; தேர்தல் வெற்றிகளுக்கு நான் எப்படி உழைத்தேன். ஸ்டாலினுக்கு எப்படி பதவிகள் வாங்கி கொடுத்தேன்' என்பது பற்றியதாகவே அது இருந்தது. மாறாக அவர் ஆளுங்கட்சிகளான, அ.தி.மு.க., - பா.ஜ., பற்றியோ, பிற கட்சிகள் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
'என்னை ஏன் நீக்கினீர்கள்; மீண்டும் கட்சியில் ஏன் சேர்க்கவில்லை' என்ற ஆதங்கத்தை ஆணித்தரமாக பேசி, தனக்கு இருக்கும் ஆதரவாளர்கள் கூட்டத்தையும் ஸ்டாலினுக்கு உணர்த்தியிருக்கிறார்.அழகிரி மத்திய அமைச்சராகும் முன், பின் என இரு முறை தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார்; ஆனால், அதற்கான காரணங்களை, 'ஜனநாயக கட்சி'யான தி.மு.க., வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அழகிரியின் பேச்சில் இருந்து கவனித்தால், 'பொதுக் குழுவே வருக' என அவரது ஆதரவாளர்கள், 'போஸ்டர்' ஒட்டியது தான், ஒரு முறை நீக்கியதற்கான காரணம் என அறியலாம்.
ஆட்டம் போட்டது யார்?
இன்னொரு ரகசியத்தையும் அழகிரி அப்பட்டமாக உடைத்திருக்கிறார். கருணாநிதி உடல்நலம் குன்றி இருக்கும் போது அவரை சந்தித்த அழகிரி, 'என்னை ஏன் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்கிறீர்கள்?' எனக் கேட்டபோது, 'இவர்கள் ஆட்டமெல்லாம் அடங்கட்டும்; கொஞ்சம் பொறுத்திரு' என்று கருணாநிதி கூறியதை குறிப்பிட்டார்.யார் ஆடிய ஆட்டத்தை கருணாநிதி கூறியிருக்கிறார்; யார் அடங்கட்டும் என கருணாநிதி நினைத்திருக்கிறார். இவருக்கு பதவி தரக்கூடாது என தி.மு.க., தலைவரையே நிர்ப்பந்தம் செய்தது யார் என்பது எல்லாம் தி.மு.க., தொண்டர்களுக்கே வெளிச்சம்.
இது உட்கட்சி விவகாரம் என்று மற்றவர்கள் கடந்து செல்லலாம்; ஆனால் கருணாநிதி, 'பொறுத்திரு' என்று சொன்னதால், இத்தனை காலம் காத்திருந்த அழகிரி, இப்போது உட்கட்சி துரோகங்களை எல்லாம் தோலுரித்து சொல்வதற்காகவே கூட்டம் நடத்தியிருக்கிறார்.எளிதில் உணர்ச்சி வசப்படும் அழகிரி, இந்த கூட்டத்தில் அமைதியாக யதார்த்தமாக பேசியதாகவே தோன்றியது. 'நான் உண்மை மட்டுமே பேசுவேன்' என்ற அவர், பல தருணங்களில் நடந்த உட்கட்சி துரோகங்களை பகிரங்கப்படுத்தி, 'தலைவர் கருணாநிதி மேல் ஆணையிட்டு சொல்கிறேன்; இதை மறுக்க முடியுமா' என்று கேட்டார்.
பதவி போர்கள்
கடந்த, 20 ஆண்டுகளாக தி.மு.க.,வில் தாண்டவமாடிய பதவி போர்கள், பதவி தட்டிப்பறிப்பு, பதவி பிடிப்பு பற்றி அவர் பேசியது சற்று சுவாரஸ்யமாகவும் இருந்தது.பொது வெளியில் அவ்வளவாக அறியப்படாத இரண்டு உண்மைகள், அழகிரி மேடை பேச்சில் இருந்து வெளிப்பட்டன. ஸ்டாலின் துணை முதல்வரானதும், தி.மு.க., பொருளாளரானதும் அழகிரியின் சிபாரிசு, ஒத்துழைப்பால், அனுமதியால் தான் என்பதே அது. ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் மிக உன்னதமாக இந்த இரு பதவிகள் பெறுவதற்கும், அழகிரி முட்டுக்கட்டை போடவில்லை; மாறாக சிபாரிசு செய்தார் என்பதற்கு, கூடவே இருந்த கட்சி பிரமுகர்கள் பெயரையும் குறிப்பிட்டார் அழகிரி.
அழகிரி மத்திய அமைச்சர் ஆனதும், துணை முதல்வர் ஆக ஆசைப்படுகிறார் ஸ்டாலின். அழகிரியிடம் இதற்கான ஒப்புதலை, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியே கேட்டிருக்கிறார். தனியறையில் நடந்த பேச்சு என்றாலும், தனியாக உங்களிடம் தலைவர் பேச விரும்புகிறார் என அழகிரியை அனுப்பி வைத்ததே ஸ்டாலின் தானாம்! அழகிரி தான் இப்படி பேசியிருக்கிறார்.கட்சியில் அழகிரிக்கு தென்மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டதும், ஸ்டாலின் கட்சியின் பொருளாளர் ஆகவிரும்பியிருக்கிறார். கட்சி நிர்வாகிகள் நேரு, ஐ.பெரியசாமி போன்றோர் அழகிரியை சந்தித்து, 'உங்கள் தம்பி பொருளாளர் பதவி வாங்கி தர கூறுகிறார்' என்று அழகிரியிடம் சிபாரிசிற்கு வர, அவர் உடனே தொலைபேசியில் கருணாநிதியிடம் பேசியிருக்கிறார். அன்று மாலையே ஸ்டாலின் பொருளாளர்.
ஸ்டாலின் பதிலளிப்பாரா?
மூத்தவரான அழகிரி பதவிகளை பெறும் போது, இளையவர் ஸ்டாலின் இந்த பதவிகளை கேட்டு வாங்கியிருக்கிறார் என்பது, இப்போது அழகிரியின் வாக்குமூலம் மூலம் புரிகிறது. வீடுகளில் அண்ணனுக்கு அப்பா புதிதாக ஏதாவது வாங்கி கொடுத்தால், தம்பி தனக்கும் வேண்டும் என்று கேட்டு அடம்பிடிப்பது போல! ஸ்டாலின் இப்படி பதவிகளை வாங்கியதற்கு என்ன காரணம் என அழகிரி வார்த்தையில் சொல்வது என்றால்... 'பொறாமை!'தான் பொறாமை தம்பியா என ஸ்டாலின் பதில் சொன்னால் தானே நமக்கு தெரியும்!
மற்ற கட்சிகளின் உள்விவகாரங்களை ஆர்வமாக பொது இடங்களில் பேசும் ஸ்டாலின், அழகிரியின் கருத்துக்களுக்கு பதிலளிப்பாரா? கருணாநிதியையும், தன்னையும் மிக மோசமாக விமர்சித்த வைகோவிற்கே, கருணாநிதி இறந்த பின், ராஜ்யசபா, 'சீட்' அளித்து சேர்த்துக் கொண்ட ஸ்டாலின், நியாயம் கேட்கும் அழகிரியையும் சேர்த்துக் கொள்வாரா? பொறுத்திருந்து கவனிப்போம்...இன்னும் இருக்கிறது எத்தனை எத்தனையோ மேடைகள்... ஓட்டளிப்பவன் உண்மை அறிய! - ஜி.வி.ஆர்., மதுரை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE