திருநெல்வேலி: ''சபாநாயகர் பதவியின் ஆளுமையை, பாமரனும் அறியச் செய்தவர் பி.எச்.பாண்டியன்,'' என, அவரது மணிமண்டப திறப்பு விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவு மண்டபம், அவரது குடும்பத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று திறந்து வைத்தனர். மனோஜ் பாண்டியன் வரவேற்றார்.
ஆளுமை
முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தமிழக சட்டசபையில், 1985 - 89 வரை சபாநாயகராக இருந்தவர், பி.எச்.பாண்டியன். சபாநாயகர் பதவியின் ஆளுமையை, பாமரனும் அறியச் செய்தவர் அவர். நாங்குநேரி பச்சையாறு திட்டம், கொடுமுடியாறு திட்டம் நிறைவேற, நீதிமன்ற ஆணைகளை பெற்றவர்.தமிழகத்தில், உணவு பற்றாக்குறை ஏற்பட்டபோது 10 ஆயிரம் டன் அரிசி விடுவிக்க, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு ஆணை பெற்றவர். அவரது ஊரான கோவிந்தபேரியில், 5 ஏக்கர் நிலம் தந்து, மனோ கல்லுாரி உருவாக காரணமானவர்.இவ்வாறு, அவர் பேசினார்.
துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''பி.எச். பாண்டியன் கற்ற சட்ட நுணுக்கங்கள், சட்டசபையில், அவர் பல சரித்திர நிகழ்வுகளை நடத்தி காட்ட உறுதுணையாக இருந்தது. சட்டசபை வழக்குகளில், அவர் அப்போது சொன்ன சட்டநுணுக்கங்கள் இன்றளவும் எடுத்துக் காட்டப்படுகிறது,'' என்றார்.
ஒரே வாகனத்தில் வலம்
சென்னையில் இருந்து நேற்று மதியம், இ.பி.எஸ்., பன்னீர்செல்வம் ஒரே விமானத்தில் துாத்துக்குடி வந்தனர். அவர்களுக்கு, திருநெல்வேலி கருங்குளத்தில், கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, இருவரும் ஒரே ஜீப்பில் சிறிது துாரம் பயணித்து, வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.அங்கிருந்து, ஒரே காரில் நிகழ்ச்சி நடந்த கோவிந்தபேரி சென்றனர். தொடர்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாசமுத்திரம், எம்.எல்.ஏ., முருகையாபாண்டியன் வீட்டிற்கு, இருவரும் ஒரே காரில் சென்று, நலம் விசாரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE