கோவை:கோவை மாவட்டத்தில், 18 கோர்ட்களில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மதுக்கரை, சூலுார், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில், 57 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
ஒருங்கிணைந்த வளாகத்தில் மட்டும், 46 நீதிமன்றங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக, ஏழு மாதங்களுக்கு மேல், வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. ஆன்லைன் வாயிலாக குறைந்த வழக்குகளே விசாரிக்கப்பட்டன.நேரடி விசாரணை முற்றிலுமாக முடக்கப்பட்டது. ஊரடங்கு முழு தளர்வு அளிக்கப்பட்ட பிறகு, இரண்டு மாதங்களாக, ஒவ்வொரு கோர்ட்டிலும், 20 வழக்குகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டது. வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்தப்பட்ட கைதிகள், தற்போது விசாரணைக்கு'எஸ்கார்ட்' போலீசாரால் நேரில் அழைத்து வரப்படுகின்றனர். ஜன., 18 முதல் முழு விசாரணை நடத்த ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது.நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட உத்தரவிடப்பட்ட நிலையில், முக்கிய கோர்ட்களில் விசாரணை நடத்த, நீதிபதிகள் இல்லை.
கோவை மாவட்டம் முழுக்க, 18 நீதிபதிகள் பணியிடம் காலியாக இருக்கிறது.ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சி.ஜே.எம்., கோர்ட், முதன்மை சார்பு கோர்ட், மூன்றாவது கூடுதல் செஷன்ஸ், முதன்மை குடும்ப நீதிமன்றம், கூடுதல் மகளிர் கோர்ட், மாவட்ட முதன்மை மற்றும் ஒன்றாவது, நான்காவது முன்சிப் கோர்ட், ஜே.எம்:4, ஜே.எம்:5 உட்பட 14 கோர்ட்களில் நீதிபதிகள் இல்லை.இது தவிர, பொள்ளாச்சி சார்பு நீதிமன்றம், மதுக்கரை, சூலுார் கோர்ட்டிலும் நீதிபதி பணியிடம் காலியாக இருக்கிறது. நீதிபதிகள் இல்லாமல் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.விரைவில் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கோர்ட்கள் செயல்படாததால், வக்கீல்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். தற்போது முழுமையாக வழக்கு விசாரணை நடத்த அனுமதி கிடைத்தும், பல நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதால், பொறுப்பு நீதிபதிகள் வழக்குகளை தள்ளிவைக்கின்றனர்.
இதன்காரணமாக, வழக்குகள் தேக்கம் அதிகரிக்கிறது. எனவே, நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அருள்மொழி, தலைவர், மாவட்ட வக்கீல்கள் சங்கம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE