புதுடில்லி : பினாமி சொத்து வழக்கில், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவின் வாக்குமூலத்தை, வருமான வரித் துறையினர் நேற்று, அவரது வீட்டிற்கு நேரில் சென்று பதிவு செய்தனர்.
காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வாத்ரா, 52, பிரிட்டன் தலைநகர் லண்டனில், 19 கோடி ரூபாய் மதிப்பில், சொத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இதைத்தவிர, 120 கோடி ரூபாய் மதிப்பில், மேலும் இரண்டு சொத்துக்களை, அங்கு அவர் வாங்கியதாக தகவல்கள் கசிந்தன. வருமான வரித் துறையிடம், இது குறித்து கணக்கு காட்டப்படவில்லை என, புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை, வருமான வரித்துறையும், அமலாக்க துறையும் தனித்தனியே விசாரித்து வருகின்றன. தன் மீதான குற்றச்சாட்டுகளை, தொடர்ந்து மறுத்து வரும் ராபர்ட் வாத்ரா, அரசியல் காரணங்களுக்கு பழிவாங்கவே, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வருகிறார். இது தொடர்பான வழக்கில், ஏற்கனவே அவர், 'முன்ஜாமின்' பெற்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால், இந்த வழக்கு விசாரணைக்கு, ராபர்ட் வாத்ராவால், நேரில் ஆஜராக முடியாமல் இருந்தது.
இந்நிலையில், டில்லியின் சுக்தேவ் விஹார் பகுதியில் அமைந்துள்ள ராபர்ட் வாத்ராவின் வீட்டுக்கு, வருமான வரித்துறையினர் நேற்று வந்தனர்.வழக்கு தொடர்பாக, வாத்ரா அளித்த வாக்கு மூலத்தை, அதிகாரிகள் பதிவு செய்தனர். எனினும், வீட்டில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE