இந்திய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவம் பழமையும், புதுமையும் வாய்ந்தது. அகத்தியர் பிறந்த தினமான மார்கழி ஆயில்ய நட்சத்திரம் சித்தமருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.சித்த மருத்துவத்தின் தொன்மையை அறிய வேண்டுமேயானால் தமிழர்களின் தொன்மை பற்றிய வரலாறுக்கு செல்ல வேண்டும்.
தற்சமயம் இந்துமகா கடலுக்குள் மூழ்கி இருக்கும் "நாவலந் தீவு" என்ற லெமூரியாவின் ஒரு பகுதியாகிய தமிழகமே மக்கள் முதன் முதலில் தோன்றிய கண்டம் என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
அங்கு தென் மதுரையின் முதல் தமிழ்சங்கம் ஏறத்தாழ 16000ம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. பின்பு 3250 ஆண்டுகளுக்கு பின்பு இடைச்சங்கம் நடைபெற்றது. இவை இரண்டுமே கடலால் கொள்ளப்பட்டு அழிந்ததால் பல்வேறு தமிழ் நுால்களும், தமிழர் வரலாறும் அழிந்து போயின. எஞ்சிய கடல் கொள்ளாத பகுதியில் கிடைத்த மந்திரம், யோகம், கற்பம், ஞானம், மருத்துவம் பற்றிய லட்சக்கணக்கான நுால்களின் மூலமாக தற்போதைய சித்த மருத்தவம் செம்மை படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ முறை கலப்பு
இடைச்சங்க காலத்தில் இந்நாட்டில் பல மொழிகளின் கலப்பு காரணமாக சித்த மருத்துவத்திலும் பல்வேறு மருத்துவ முறை கலப்பு ஏற்பட்டது. ஒரு ஓலைச் சுவடியின் ஆயுட்காலம் 300 ஆண்டுகள் தான். சித்த மருத்துவர்கள் வீடுகளில் வைத்திருந்த ஓலைச்சுவடிகளும் கரையானால் அரித்து, அழிந்து போயின.பண்டைய மதுரையில் 2ம் நுாற்றாண்டின் இடைக்காலத்தில் தமிழ் கடைச்சங்கம் நடைபெற்றது. இது தமிழின் பொற்காலம் எனச் சொல்லலாம். மருத்துவர் தாமோதரனார் தமிழ் மருத்துவப் புலவராக இருந்து மருத்துவத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை நிரூபனம் செய்கிறார். இடைச்சங்க காலத்தில் கிடைத்த மாபுராணம் என்ற மருத்துவ நுால் தமிழ் மருத்துவத்தின் தொன்மையை விளக்குகிறது. தமிழர் நாகரீகத்தோடு பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து இருந்தன. ஆகையால்தான் தமிழ்மொழியில் பல்வேறு சொற்களும் கலந்து இருக்கின்றன. மெசப்படோமியாவை விட பழமையான, ஆனால் அதற்கும் மேலான நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பதில் தற்சமயம் கிடைக்கும் பல்வேறு அகழ்வாராய்ச்சியின் மூலம்பெருமை கொள்ள முடியும்.
திருமூலர் சொன்னது
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர்,
'மறுப்ப துடல் நோய்
மருந்தென வாகும்
மறுப்ப துள நோய் மருந்தெனல்
சாலும்மறுப்ப தினி
நோய் வராதிருக்க
மறுப்ப துசாவை மருந்தென
லாமே"
என உடலில் நோய் வராமல் தடுத்தல், மனதில் நோய் வராமல் காத்தல், நோய் வராமல் இருக்க தடுப்பு மருந்தாக செயல்படுதல் மற்றும் நீண்ட நாள் உடலை வாழ காயகற்பமாக திகழ்தல் என்ற குணங்களையும் உடையது மருந்தாகும் எனக் குறிப்பிடுகிறார். சித்த மருத்துவமும் காப்பு, நீக்கம், நிறைப்பு என்ற மூன்றின்
அடிப்படையில் நோய் வராமல் காக்கவும், வந்த நோயை நீக்கவும், உடலில் குறைந்த சத்துகளை நிறைக்கவும் பயன்படுவதே மருந்து என குறிப்பிடுகிறது.
அறுவை சிகிச்சை
பல்வேறு உலோகங்களை முறைப்படி சுத்தம் செய்து மிக நுண்ணியதாக மாற்றி நீண்ட ஆயுள் தரும் காப்பு மருந்துகளாக செய்வது சித்த மருத்துவமே. மூலிகைகள், உலோகங்கள் மற்றும் பொருட்களால் செய்யப்பட்ட மருந்துகள், அறுவை சிகிச்சை முறைகள், பல்வேறு உலோகங்களை கலந்து செய்யும் உலோக கலப்பு முறைகள், மருந்துகளின் துாய்மை தன்மை சோதனை செய்யவும், அவற்றை மெருகேற்றவும் பயன்படும் மருந்துகள், யோக முறைகள், ஆழ்ந்த மயக்கத்தில் உள்ளவரை எழுப்பும் மருந்துகள், வலியை நீக்கி நரம்புகளை முறுக்கேற்றும் வர்ம மருத்துவம் ஆகியன சித்த மருத்துவத்தின் சிறப்பு அம்சங்களாகும். பிறமொழி நுால்களில் காணப்படும் பதஞ்சலி, தன்வந்திரி ஆகியவர்களின் பெயர்களும் பதினெண் சித்தர்களில்
ஒருவராக சித்த மருத்துவத்தில் குறிப்பிப்படுகின்றன.
நாடியின் மூலம் சிறப்பாக நோய் அறியும் தன்மை, இருபதுக்கும் மேற்பட்ட உலோகங்களை அறுபதுக்கும் மேற்பட்ட உலோகக் கலவைகளாக மாற்றி மருந்துகளாக செய்கின்ற தன்மை சித்த மருத்துவத்தின் சிறப்பாகும்.குமரிக்கண்டத்தின் தொன்மையில் சித்த மருத்துவத்தின் வரலாறு தொடங்குகிறது. மிளகு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை மருந்தாக பயன்படுத்தியது மட்டுமன்றி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த தொன்மை மதுரை காஞ்சி யில் விளக்கப்பட்டு
உள்ளது. வேப்பங்காயும், கடுக்காயும் கசப்பானது என்றும் ஆனால் மருந்தாக பயன்பட்டு நமக்கு எப்படி நன்மை அளிக்கிறதோ அதுபோல பெரியவர்களின் சொல் கசப்பாக இருந்தாலும், நமக்கு நன்மை தரும் என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இரவு மரம் மற்றும் வேப்பிலையை வீட்டுத் திண்ணைகளில் சொருகி வைத்து நுண்கிருமிகள் தாக்காமல் காத்தனர் நமது முன்னோர்கள். இதனை புறநானுாறு "தீங்கனி இரவமோடு வேம்புமனை பெரிஇ" என சிறப்புற்றுக் கூறுகிறது.
கல்வெட்டுகளிலும்
சங்க இலக்கியங்களிலும் பண்டைய தமிழ் நூற்களிலும் பிறநாடுகளில் காணப்படும் கல்வெட்டுகளிலும் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் தமிழ் மருத்துவத்தின் தொன்மையை நமக்கு உணர்த்துகிறது. செயற்கை உறுப்பை பொருத்திக் கொள்ளும் உறுப்பு மாற்று சிகிச்சை செய்த கொற்கை பாண்டியன் என்ற பொற்கை பாண்டியன் தனக்கு செயற்கை கை செய்து பொருத்திக் கொண்டதை குணமாலை குறிப்பிடுகிறது. தான் அறுத்து எறிந்த கைக்கு மாற்றாக பொன்னால் செய்யப்பட்ட கையை மன்னன் அணிந்தது செயற்கை உறுப்புகளை பொருத்தி கொள்ளும் வரலாற்றுக்கு சான்றாக இது கல்வெட்டில் பொறிக்கப்பட்டுஉள்ளது.
இலக்கியங்களில் காணப்படும் மருத்துவ குறிப்புகள் தமிழ் மருத்துவம் தனி மருத்துவமாக தமிழ் மக்களிடம் திகழ்ந்ததற்கு ஆதாரமாக விளங்குகின்றது. சிரல் என்னும் பறவை குளத்தில் இருக்கும் மீனை எப்படி கொத்திக் கொண்டு பறக்கிறதோ அதுபோல வெள்ளியால் செய்யப்பட்ட ஊசியினால் போரில் காயம் பட்ட வீரர்களின் காயங்களை மருத்துவர்கள் தைத்ததாக பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அத்திப்பாலால் புண்களை ஆற்றி தழும்பு இல்லாமல் செய்யப்படும் சிகிச்சையை புறநானுாறு குறிப்பிடுகிறது. மங்களை என்ற மருத்துவப்பெண்கொங்கு மன்னரின் ராணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து தந்த முறையை கொங்குமண்டல சதகம்என்னும் நுால் குறிப்பிடுகிறது. தமிழ் மருத்துவத்தில் மருத்துவ தாதிகள் போரில் அடிபட்டவர்களுக்கு எண்ணெய் தடவி புண்களை கட்டுப் போட்டதுமன்றி போருக்கு சென்ற அரசனை நினைந்து வருந்திக்கொண்டிருக்கும் ராணிகளுக்கு உள்ளங்கால்களையும் உடம்பையும் வருடி துாக்கம் வரச் செய்யும் தொக்கணம் என்ற மசாஜ் சிகிச்சை செய்ததை சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.
நானோ மருத்துவ முறை
பொன்னால் செய்யப்பட்ட மணியை உரசி அத்துடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு ஊட்டும் முறையில் தமிழ் பெண்கள் கை தேர்ந்து இருந்தனர். நானோ மருத்துவ முறையில் மிக நுண்ணிய அளவில் தங்கம், வெள்ளி போன்றவற்றை மருந்தாக வழங்கும் கலை தமிழ் மக்களுக்கு தெரிந்து இருந்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ், இசைமணி ஆகியவற்றை ஒலித்து அவர்களை மகிழ்ச்சி படுத்தி மருத்துவம் செய்த வழக்கமும் சித்த மருத்துவத்தில் காணப்படுகிறது. பல்வேறு மூலிகைகளை சேர்த்து பொடி செய்து அதன் மூலம் மாதவி தன் கூந்தலை சுத்தம் செய்து கொண்டதாக அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். பண்டைய தமிழர்களின் வாழ்வியலில், நலவியல், அறுவை சிகிச்சை, அழகியல் என அனைத்திலும் சித்த மருத்துவம் நிறைந்து இருந்தது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்துகளும் அவற்றில் இருந்து எண்ணிக்கையில் அடக்க முடியாத வேதி மூலக் கூறுகளும் பல ஆயிரங்களுக்கு மேற்பட்ட சித்த மருத்துவ நுாற்களும் என சித்த மருத்துவம் ஒரு அறிவுக் களஞ்சியம். பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை தளத்தை அமைத்துக் கொடுக்கப் போவது சித்த மருத்துவம். புதிய நோய்களின் தாக்கம் ஏற்படும் பொழுதெல்லாம் எளிய மருந்துகளால் இதனை கட்டுப்படுத்த முன்னெடுப்பது சித்த மருத்துவம். எளிய முறையில் தாய் நமக்கு தரும் உணவு எப்படி பாதுகாப்பானதோ அதுபோல் சித்த மருத்துவமும் பாதுகாப்பானது. நமது தாய் மண்ணின் சித்த மருத்துவத்தை பின்பற்றுவோம். நோயின்றி வாழ்வோம்.-ஜெ.ஜெயவெங்கடேஷ்சித்த மருத்துவர், மதுரை90030 00250
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE