'லேடி' மேட்டர்... உளவுத்துறை 'டர்ர்...!'

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021
Share
Advertisement
வீட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, ''என்னப்பா, தேர்தல் களம் சூடாயிருச்சு போலிருக்கே; தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நேருக்கு நேரா மோத ஆரம்பிச்சிட்டாங்களே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''தொண்டாமுத்துார்ல நடந்ததை கேட்குறீங்களா? அமைச்சர் வேலுமணி தொகுதிக்குள்ள வந்து, ஸ்டாலின் சீண்டிப்பார்த்தாரு. ஒரு 'லேடி'யை அனுப்பி, கையை
 'லேடி' மேட்டர்... உளவுத்துறை 'டர்ர்...!'

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, ''என்னப்பா, தேர்தல் களம் சூடாயிருச்சு போலிருக்கே; தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நேருக்கு நேரா மோத ஆரம்பிச்சிட்டாங்களே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''தொண்டாமுத்துார்ல நடந்ததை கேட்குறீங்களா? அமைச்சர் வேலுமணி தொகுதிக்குள்ள வந்து, ஸ்டாலின் சீண்டிப்பார்த்தாரு. ஒரு 'லேடி'யை அனுப்பி, கையை நீட்டி, கேள்வி கேட்க வச்சு, அசிங்கப்படுத்திட்டாங்க. இதனால, உடன்பிறப்புகள் கொதிப்புல இருக்காங்க,''

''உளவுத்துறை போலீசாருக்கு மேலிடத்துல இருந்து, செமத்தியா 'டோஸ்' விழுந்ததாமே,''

''அதுவா, திடீர்னு ஆளுங்கட்சியை சேர்ந்த, 'லேடி' பிரச்னை செஞ்சதுனால, போலீசாருக்கு ஏகப்பட்ட டென்ஷன். இப்படியொரு, 'பிளான்' வச்சிருக்காங்கங்கிறதை, ஏன் முன்கூட்டியே உளவு பார்த்து சொல்லலைன்னு கேள்வி கேட்டு, 'திட்டு' விழுந்திருக்கு,''

''கட்சி மாறுன மாஜி மேயரும் கூட்டத்துக்கு வந்திருந்தாராமே,''

''ஆமாக்கா, அவரை வச்சு, ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுக்குறதுக்கு, 'பிளான்' பண்ணியிருப்பாங்க. கூட்ட நிகழ்வு வேற மாதிரி போயிடுச்சு; கூட்டத்தோடு கூட்டமா நின்னுட்டு, திரும்பி போயிட்டாராம்,''

''தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கறதுக்காக, ஆளுங்கட்சி தரப்பிலும், மாரியம்மன் கோவில் திடலில் கூட்டம் நடத்துனாங்களே,''

''தி.மு.க., திரட்டிய கூட்டத்தை விட, மும்முடங்கு அதிகமா ஆட்களை வரவழைக்கணும்னு உத்தரவு போட்டிருந்தாங்களாம். 10 ஆயிரம் பேர் வந்துட்டாங்களாம்,''

''அடேங்கப்பா,'' என, வாயை பிளந்தாள் சித்ரா.''லேடீஸ்க்கு சில்வர் குடம் கொடுத்ததா சொன்னாங்களே,''''அது, தொண்டாமுத்துார்ல இல்லே; பீளமேட்டில் இருக்குற அகிலாண்டேஸ்வரி கோவில் மண்டபத்துக்கு, ஓட்டுள்ள பெண்களை, அ.தி.மு.க.,வினர் வரவழைச் சிருந்தாங்க. ஒவ்வொருத்தருக்கும் சாப்பாடு போட்டு, சில்வர் குடம் கொடுத்திருக்காங்க. வரப்போற தேர்தல்ல லேடீஸ் ஓட்டு அதிகமா இருக்கறதுனால, ஆளுங்கட்சி தரப்புல, இப்பவே காய் நகர்த்த ஆரம்பிச்சிட்டாங்க,''

''தொண்டாமுத்துார் தொகுதியை கமல் கட்சியும் குறி வச்சிருக்கு போலிருக்கே,''

''ஆமாக்கா, மாதம்பட்டியில் கூட்டம் நடத்துறதுக்கு ஏற்பாடு செய்றாங்க; பிரசாரத்துக்கு கமல் வர்றாராம். அமைச்சர் தொகுதியில், என்னென்ன பிரச்னை இருக்கு, என்னென்ன ஊழல் நடந்திருக்குன்னு, பட்டியல் தயாரிச்சிட்டு இருக்காங்களாம்,''தேங்காய் சட்னியுடன் பஜ்ஜி, பில்டர் காபி கொடுத்து, உபசரித்த சித்ரா, ''ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களே, நீ போனியா,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, ஒரு 'ரவுண்டு' சுத்திப்பார்த்துட்டு வந்தேன். எலக்சன் வரப்போறதுனாலேயோ, என்னவோ, தட்டுப்பாடு இல்லாம, பொங்கல் பரிசு பொருள் கொடுத்தாங்க; பை கிடைக்காம, சில இடங்கள்ல பிரச்னை நடந்துச்சு; போலீஸ்காரங்க சமாளிச்சாங்க,''

''ஆளுங்கட்சிக்காரங்க வாழைமரம் கட்டி, கட்சி ஆபீஸ் மாதிரி, சில இடங்கள்ல, கடையை மாத்தி வச்சிருந்தாங்க. ஆளுங்கட்சியை சேர்ந்த, 10 பேரு, கடைக்கு முன்னாடி நின்னுகிட்டு, வரிசையை ஒழுங்குபடுத்துனாங்க.அவுங்களுக்கு வேண்டப்பட்டவங்க வந்தா, உடனே கொடுக்கச் சொல்லி, 'டார்ச்சர்' செஞ்சதுனால, இந்த தடவை கடைக்காரங்க ரொம்பவே அவஸ்தைப்பட்டாங்க,'' என்றபடி, பஜ்ஜியை எடுத்து, சட்னியை தொட்டு, சுவைக்கத் துவங்கினாள்.

''எப்பவுமே, கட்சிக்காரங்க இப்படித்தான். தேர்தல் வரப்போகுதுல்ல, ஆளுங்கட்சிக்காரங்க ஆட்டம் இனி அதிகமாத்தான் இருக்கும்,'' என்ற சித்ரா, ''மாவட்ட வழங்கல் துறையினரை, கலெக்டர் ஒரு பிடி பிடிச்சுட்டராமே,'' என, நோண்டினாள்.

''அதுவா, கேரளாவுக்கு டன் கணக்குல ரேஷன் அரிசி கடத்துறாங்க. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஒரு பெண் ஊழியர், குடோன் எடுத்து, ஏழு டன் அரிசியை பதுக்கி வச்சிருந்திருக்காங்க. நீங்கள்ல்லாம் ரொம்ப சோர்ந்துட்டீங்க; அதனாலதான் இப்படி செய்றாங்க. வேலையை வேகப்படுத்துங்க. இல்லேன்னா, நானே களமிறங்க வேண்டியிருக்கும்னு, 'வார்னிங்' கொடுத்திருக்காரு,'' என்றபடி, பில்டர் காபியை உறிஞ்சினாள்.

''ஓ... அப்படியா,'' என்ற சித்ரா, ''பேரூர் வரைக்கும் போகணும், வர்றீயா,'' என, அழைத்தாள்.

''அக்கா, நானில்லாமல் தனியா போகப் போறீங்களா, இதோ வந்துட்டேன்,'' என்றபடி, கண்ணிமைக்கும் நேரத்தில், ஸ்கூட்டர் பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''பட்டீஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கலையாமே,'' என, கேட்டாள்.

''மித்து, அதெல்லாம், சாதாரண பக்தர்களுக்கு! எம்.எல்.ஏ., எட்டிமடை சண்முகம் மனைவி, எஸ்.பி., அருளரசு மனைவி வந்திருந்தாங்க. அதிகாரம் படைச்சவங்க குடும்பத்தினர் என்பதால், மரியாதை கொடுத்து அழைச்சிட்டு போயிருக்காங்க. பனியில் அவதிப்பட்டுட்டு இருந்த பக்தர்கள், கோவிலுக்குள் ஏகப்பட்ட பேரு இருக்கறதை பார்த்துட்டு, வாக்குவாதம் செஞ்சிருக்காங்க,'' என, டவுன்ஹாலை கடந்து, செல்வபுரம் ரோட்டில், ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

''அக்கா, அமைச்சர் வேலுமணியையும் கிராம மக்கள் சூழ்ந்துட்டாங்களாமே,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.

''ஆமாப்பா, ரெண்டு வாரமா, தொண்டாமுத்துார் ஏரியாவுல, ஒரு இடம் விடாம, பம்பரமா சுழண்டுட்டு வர்றாரு. வடிவேலாம்பாளையம் கிராமத்துல, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பெண்கள், அவரை முற்றுகையிட்டாங்களாம். 'அப்செட்'டான அமைச்சர், தேவையான வசதி செஞ்சு தர்றேன்னு, உறுதி சொன்ன பிறகே, வழி விட்டாங்களாம்,''

''ஆளுங்கட்சி கூட்டணியில், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு தொகுதின்னு உடன்பாடு ஏற்படலை. அதுக்குள்ள, பா.ஜ., தரப்புல, தொகுதியையும், வேட்பாளரையும் அறிவிச்சிட்டாங்களே,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''யெஸ் மித்து, நீ சொல்றது வாஸ்தவம்தான்! இவுங்களுக்காக, 38 தொகுதி கேட்குறோம்னு, பட்டியலை வெளியிட்டிருக்காங்க. நம்ம மாவட்டத்துல, கோவை தெற்கு, சூலுார் தொகுதி, லிஸ்ட்டுல இருக்கு. அதைப்பார்த்து, ஆளுங்கட்சி நிர்வாகிகள், 'மூடு அவுட்'டுல இருக்காங்களாம்,''

''லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டை பத்தி, எதுவுமே சொல்லலையே,'' என, ஞாபகப்படுத்தினாள் சித்ரா.''ஓ... சாரி... சாரி,'' என்ற மித்ரா, ''தனக்கு தான், 'ஸ்கெட்ச்' போட்டிருக்காங்கன்னு, கல்வித்துறை 'லேடி' அதிகாரி உணராம, 'அசால்ட்'டா இருந்திருக்காங்க. கைப்பையையும், போனையும் கேட்டபோதே, அதிர்ச்சியாகி இருக்காங்க,''

''அடடே... அப்புறம், என்ன நடந்துச்சு,''''கல்வித்துறையில், சி.இ.ஓ.,க்கு எதிரா ஒரு குரூப் வேலை செஞ்சுக்கிட்டு இருந்திருக்கு. லஞ்ச ஒழிப்பு துறைக்கு போட்டுக் கொடுத்திருக்காம்,''

''இதுல, தற்காலிகமா பி.ஏ.,வா இருந்தவரும் சேர்ந்து சிக்கிட்டாராம். ஒரிஜினல் பி.ஏ.,வா இருந்தவரு, 'கொரோனா' பாதிப்புக்குள்ளானதுனால, குரும்பபாளையம் பள்ளி தலைமை ஆசிரியரா இருந்தவரை, மாற்றுப்பணியா, தற்காலிகமா நியமிச்சிருக்காங்க; நல்லாசிரியர் விருது வாங்குனவராம். கல்வித்துறை சம்பந்தமான பணத்தை, அதிகாரியின் பி.ஏ., கையாள்றது வழக்கமாம்; அதனால, சி.இ.ஓ., கொடுத்த பணத்தை வாங்கி, வச்சிருந்தாராம். அந்த பணம் எந்த நோக்கத்துக்காக வாங்குனதுன்னு, தனக்கு தெரியாதுன்னு புலம்பிட்டு இருக்காராம்,'

'''ஒரு, 'லேடி' இன்ஸ்பெக்டரையும் கைது செஞ்சாங்களே,''

''அதுவா, கஞ்சா வியாபாரியிடம் கரன்சி கேட்டு, 'டார்ச்சர்' கொடுத்திட்டே இருந்திருக்காங்க. 'பணம் கொடுக்க முடியலைனா, தாலியை வித்து தர வேண்டியது தானே'ன்னு, கேட்டாங்களாம். அதுல கடுப்பான, கஞ்சா வியாபாரியின் மனைவி, லஞ்ச ஒழிப்பு போலீசுல வசமா சிக்க வச்சிட்டாங்களாம்,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை திருப்பினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X