சென்னை : தமிழகத்தில், திரைஅரங்குகளில், 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25 முதல், பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள், திரைஅரங்கு வளாகம், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட, அனைத்து திரையரங்குகளும், 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி, நவ., 11 முதல் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்தது.எனினும், 100 சதவீத இருக்கைகள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படாததால், பெரிய நடிகர்களின் படங்கள் திரையிடப்படாமல் இருந்தன.
எனவே, திரையரங்கு உரிமையாளர்கள், 100 சதவீதம் இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நடிகர் விஜய், முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அவரது படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால், திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகள், 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே, திரையரங்குகளில் பின்பற்றுவதற்காக வெளியிடப்பட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை, அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE