சென்னை : 'தமிழக பா.ஜ., உத்தேச வேட்பாளர் பட்டியல் ஏதும் வெளியிடப்படவில்லை; சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., 38 தொகுதிகளில், போட்டியிட உள்ளதாகவும், அந்த தொகுதிகள் பெயர், அதில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் என, பட்டியல் ஒன்று, சமூக வலைதளங்களில் வெளியானது. இது தவறான பட்டியல் என, பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை:பா.ஜ., போட்டியிட திட்டமிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் என்ற ரீதியில், ஒரு பட்டியல் உலா வருகிறது. தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், பா.ஜ.,வின் வளர்ச்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலிமையை தாங்கிக் கொள்ள முடியாத, சில தீய சக்திகள், உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேர்தலுக்கு பல மாதங்கள் இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை, முறைப்படி உரிய நேரத்தில், அதிகாரப்பூர்வமாக கூட்டணி தலைமை அறிவிக்கும். அதன்பின், பா.ஜ., வேட்பாளர்களை, முறையாக, பா.ஜ., தேசிய தலைமை அறிவிக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE