சென்னை : ரேஷனில், 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி, நேற்று துவங்கியது.
அதிகாலை முதலே கடைகளுக்கு வந்திருந்த கார்டுதாரர்கள், பல பணி நேரம் வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கம், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம், முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்து உள்ளது.கடைகளில், கூட்டத்தை கட்டுப்படுத்த, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற, 'டோக்கன்' கார்டுதாரரின் வீடுகளில், டிச., இறுதியில் வழங்கப்பட்டன. 'பாயின்ட் ஆப் சேல்'ஒரு கடையில், தினமும், தலா, 200 கார்டுகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், பரிசு தொகுப்பு வினியோகம், ரேஷன் கடைகளில், நேற்று காலை துவங்கியது. கார்டுதாரர்கள், அதிகாலை முதல், கடைகளுக்கு வந்தனர். பலர், சமூக இடைவெளி விட்டு நிற்பது, முக கவசம் அணிவது போன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை.போலீசார் வந்து, அவர்களை வரிசையில் நிற்க வைத்தனர். விரைவாக வழங்கும் வகையில், கார்டுதாரரின் கைரேகை பதிவிற்கு பதில், ரேஷன் கார்டை, 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து, ரொக்கப் பணத்தையும், பரிசு தொகுப்பையும் வழங்கினர். வரும், 13ம் தேதி வரை, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
கார்டுதாரர்கள் கூறுகை யில், 'வீட்டு வேலை செய்தாலே, மாதம், 1,500 ரூபாய் வரை தான் சம்பளம் கிடைக்கும். அரசு, பொங்கல் பரிசாக, 2,500 ரூபாய் வழங்கி உள்ளது. அந்த பணம், இம்மாத குடும்ப செலவுகளை சமாளிக்க, பெரிய உதவியாக இருக்கும்' என்றனர்.ரூ.1,096 கோடிரேஷன் கடைகளில், நேற்று ஒரே நாளில் மட்டும், 43.85 லட்சம் கார்டுதாரருக்கு, தலா, 2,500 ரூபாய் என, 1,096 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.கார்டு வாங்காதோருக்கும் உண்டுபுதிய ரேஷன் கார்டு கேட்டு, உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளத்தில், 2020 டிச., வரை பலர் விண்ணப்பித்து உள்ளனர்.
அவற்றை, அதிகாரிகள் பரிசீலித்து, தகுதியான நபருக்கு, ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.அதன்படி, செப்., முதல் டிச., வரை, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, கடை ஒதுக்கி, உணவு வழங்கல் துறை சார்பில், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், அவர்களுக்கு இதுவரை, கார்டு அச்சிடப்பட்டு வழங்கவில்லை. அவர்களில், அரிசி பிரிவில் உள்ளவர்கள், தற்போது, ரேஷனில் வழங்கப்படும், 2,500 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கலாம்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கார்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கார்டு சேர்ந்ததும் தான், அச்சிட்டு வழங்குகிறது.டிச., இறுதி வரை, ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களுக்கு ஒதுக்கியுள்ள கடைக்கு, வரும், 11ம் தேதி முதல், 13ம் தேதி வரை சென்று, எஸ்.எம்.எஸ்.,ஐ காட்டி, பொங்கல் பரிசு வாங்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE