சென்னை : 'அரசியல் சண்டைகளை, ஏன் நீதிமன்றத்துக்கு எடுத்து வர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தெரு விளக்குகளை, எல்.இ.டி., பல்புகளாக மாற்றியதில், 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, அமைச்சர் வேலுமணிக்கு எதிராகவும்; ரேஷனில் அரிசி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, உணவு துறை அமைச்சருக்கு எதிராகவும், லஞ்ச ஒழிப்புத் துறையில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு புகார் அளித்திருந்தார்.வழக்குப் பதிவு செய்ய, கவர்னரின் ஒப்புதல் பெறக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தார்.
இந்நிலையில், 'பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த, பொதுத்துறை செயலர் அனுமதி பெற வேண்டும்' என, 2018ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து, அப்பாவு தாக்கல் செய்த மனு:ஊழல் தடுப்பு சட்டத்தில், 2018ல் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு, 2018 டிசம்பரில் பிறப்பித்தது. முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக நானும், தி.மு.க., நிர்வாகிகளும், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்கள் அளித்துள்ளோம். என் புகார்களை அரசின் பொதுத்துறை முதன்மை செயலருக்கு அனுப்பி இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து தகவல் வந்தது. 2018 டிசம்பரில் பிறப்பிக்கப் பட்ட அரசாணையின்படி, முதன்மை செயலரின் நடவடிக்கைக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அரசியலமைப்பு சட்டப்படி, முதல்வர், அமைச்சர்களை, கவர்னரால் தான் நீக்க முடியும். அதனால், ஊழல் தடுப்பு சட்டப்படி, கவர்னரிடம் இருந்து தான் ஒப்புதல் பெறப்பட வேண்டும். முதல்வர், அமைச்சர்களை நீக்கும் அதிகாரம், பொதுத்துறையின் முதன்மை செயலருக்கு இல்லை. அதனால், அவர் தகுதியான அதிகாரி அல்ல. எனவே, என் புகார்களுக்கு ஒப்புதல் பெற, கவர்னருக்கு அனுப்பும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். முதல்வர், அமைச்சர்கள் போன்ற பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீதான விசாரணைக்கு, பொதுத்துறை செயலர் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அரசாணையின் குறிப்பிட்ட பகுதியை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அப்பாவு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ''முதல்வர், அமைச்சரவையின் கீழ், பொதுத்துறை செயலர் செயல்படுகிறார். ஒப்புதல் வழங்க, அவர் உரிய அதிகாரி அல்ல'' என்றார்.இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, 'அரசியல் சண்டைகளை, அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியது தானே; எதற்காக நீதிமன்றத்துக்கு எடுத்து வருகிறீர்கள்?' என, கேள்வி எழுப்பியது.அதற்கு, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ''அரசாணையின் ஒரு பகுதி செல்லத்தக்கதா என, கேள்வி எழுப்புகிறோம்,'' என்றார்.
மறைந்த தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை, மூத்த வழக்கறிஞர் படித்துகாட்டினார்.அதைத்தொடந்து, இந்த வழக்கில் அரசு தரப்பு பதில் அளிக்க, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், 'நோட்டீஸ்' பெற்று கொண்டார். விசாரணை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE