சென்னை : ''தமிழகத்தில், சட்டசபை தேர்தலை, இரண்டு கட்டமாக நடத்தும்படி, தேர்தல் கமிஷனுக்கு, பரிந்துரை எதுவும் செய்யவில்லை,'' என, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தமிழகத்தில், ஓரிரு மாதங்களில், சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. 'சட்டசபை பொதுத் தேர்தலை, ஒரே கட்டமாக நடத்த வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில், சட்டசபை தேர்தலை, இரண்டு கட்டமாக நடத்தும்படி, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாஹு பரிந்துரை செய்துள்ளதாக, தகவல் வெளியானது. இந்த தகவலை, அவர் மறுத்து உள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:தமிழக சட்டசபை பொதுத் தேர்தலை, இரண்டு கட்டமாக நடத்தும்படி, பரிந்துரை எதுவும் செய்யவில்லை.
இதுவரை தேர்தல் தொடர்பாக, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பாதுகாப்பாக வைக்க, கிடங்கு கட்டும்படி, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது.அதன்படி, கடந்த ஆண்டு, 30 மாவட்டங்களில், கிடங்கு கட்ட, தமிழக அரசு, 120.87 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதன்பின், மதுரையில் கிடங்கு கட்ட, 6.19 கோடி ரூபாய்; சென்னையில் கிடங்கு கட்ட, 7.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தர்மபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், தேனி மாவட்டங்களில், கிடங்கு கட்டுமான பணி முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.ஐந்து மாவட்டங்களில், வரும், 15ம் தேதிக்குள்; 14 மாவட்டங்களில், ஜன., 31க்குள்; மூன்று மாவட்டங்களில், பிப்., 28க்குள்; மூன்று மாவட்டங்களில், மார்ச், 31க்குள்ளும், கிடங்கு கட்டுமான பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை மாவட்டத்தில், டெண்டர் இறுதி செய்யப்பட்டதும், பணி துவக்கப்படும்.இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE