திருப்பூர்:'ஒசைரி நுால் விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்'' என்று பின்னலாடை தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழக நுாற்பாலைகள், ஒசைரி நுால் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களில், கிலோவுக்கு 30 ரூபாய்க்கு மேல் நுால் விலை உயர்ந்துள்ளது. நுாற்பாலைகள், நுால் விலையை உடனடியாக குறைக்கவேண்டும் என, பின்னலாடை தொழில் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றன.திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் அறிக்கை:கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பூர் பின்னலாடை துறை, தற்போதுதான் மீண்டும் எழுச்சிபெற துவங்கியுள்ளது.
இச்சூழலில், நுால் விலை அபரிமிதமாக உயர்ந்துவருவது, கவலை அளிக்கிறது. கையிருப்பு ஆர்டர்களுக்கு, ஆடை தயாரிப்பது சிக்கலாகியுள்ளது.உள்நாட்டிலும், சர்வதேச சந்தையிலும், போட்டி அதிகரித்து காணப்படுகிறது. நுால் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆடை விலையை உயர்த்த முடிவதில்லை; மீறி உயர்த்தினால், வர்த்தகத்தை இழக்கநேரிடுகிறது.
ஏற்றுமதியில் முழு கவனம் செலுத்தும் நுாற்பாலைகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, போதுமான அளவு நுால் வழங்குவதில்லை. இதனால், குறித்த காலத்தில் ஆடை தயாரித்து, வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகருக்கு அனுப்புவதும் இயலாததாகிறது.நுால் விலை உயர்வு, நுால் தட்டுப்பாடு காரணமாக, நுாற்பாலை, நிட்டிங், டையிங், பிரின்டிங் என, ஆடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களும் பாதிக்கப்படும்; தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை உருவாகிவிடும்.
பொங்கல் பண்டிகை நெருங்குகிறது; தொழிலாளர் அதிக நாட்கள் விடுப்பு எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், ஆடை தயாரிப்பை விரைந்து முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தொழில் சூழலை உணர்ந்து, தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை குறைக்கவேண்டும்; அடுத்த இரண்டு மாதங்களுக்கு, விலையை சீராக வைத்திருக்கவேண்டும்.
நுால் ஏற்றுமதியைவிட, ஆடை ஏற்றுமதி மூலம், நாட்டுக்கு அதிக அன்னிய செலாவணி கிடைக்கும்; வேலை வாய்ப்பும் பெருகும்.எனவே, உள்நாட்டு நிறுவனங்களின் ஆடை உற்பத்திக்கு போதுமான அளவு நுால் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்; உபரியை மட்டும், ஏற்றுமதி செய்யவேண்டும்.நுால் விலை கட்டுப்படுத்தப்படாவிட்டால், அனைத்து ஆடை உற்பத்தியாளர் சங்கங்களையும் இணைந்து, உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE