உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பள்ளி துாய்மை பணியாளர்களுக்கான சம்பளம் , தாமதமின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமப்புற பள்ளிகளில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக, அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக, தற்காலிக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் வாயிலாக, இப்பணியாளர்களை நியமனம் செய்து, அவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்களுக்கு, துவக்கப்பள்ளியில் ஊதியமாக, 750 ரூபாய், நடுநிலைப்பள்ளியில், ஆயிரம் ரூபாய், உயர்நிலைப்பள்ளியில், 1,500 ரூபாய், மேல்நிலைப்பள்ளிக்கு, 2,000 ரூபாய் என, அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.ஏற்கனவே, இப்பணியாளர்களுக்கு மூன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள் செயல்படாமல் உள்ளது. இருப்பினும், ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிகளை துாய்மையாக பராமரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதனால், சுகாதாரப்பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளை துாய்மைப்படுத்தும் இப்பணியாளர்களுக்கு ஆறு மாதமாக, ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.சில பள்ளிகளில் ஆசிரியர்களின் முயற்சியால், பணியாளர்கள் துாய்மைப்பணிகளை செய்கின்றனர். இருப்பினும், அரசின் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், அவர்கள் பள்ளிக்கு வர மறுக்கின்றனர்.பள்ளியின் சுகாதாரத்தை தொடர்ந்து மேம்படுத்த, அவர்களுக்கான ஊதியத்தை தாமதமின்றி அரசு வழங்க வேண்டுமென, ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE