பொள்ளாச்சி:'திருமூர்த்தி அணையில் இருந்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு வரும், 11ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்,' என, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு சார்பில், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது.பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில், பயனடையும் விளைநிலங்கள், நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, மொத்தம், 3.77 லட்சம் ஏக்கருக்கு பாசன நீர் வினியோகிக்கப்படுகிறது.பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் சேகரமாகும் தண்ணீர், திருமூர்த்தி அணைக்கு கொண்டு வரப்பட்டு, பாசனத்துக்கு திறக்கப்படுகிறது.இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நான்கரை சுற்று தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. மழைப்பொழிவும் இருந்ததால், போதிய நீர் கிடைத்தது. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்றும்; ஐந்து சுற்று தண்ணீர் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.வரும், 11ம் தேதி மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு சார்பில், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பி.ஏ.பி., பாசனத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனங்களுக்கு தலா, ஐந்து சுற்றுகள் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அன்றைய நிலையில், தொகுப்பு அணைகளில் இருக்கும் நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் ஆகியவை கணக்கிடப்பட்டது.அதில், இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனங்களுக்கு தலா, நான்கரை சுற்று தண்ணீர் மட்டுமே வழங்க இயலும்; மழை பெய்து தொகுப்பு அணைகளுக்கு கூடுதலாக தண்ணீர் வந்தால், கூடுதலாக அரை சுற்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இந்நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, நான்கரை சுற்று தண்ணீர் வழங்க அரசாணை பெறப்பட்டது. நான்கு சுற்றுகள் தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், அரை சுற்று தண்ணீருக்கு பதிலாக, ஒரு சுற்று தண்ணீர் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், தொகுப்பு அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீரை கணக்கிட்டு, இரண்டாம் மண்டல பாசனத்துக்கு அரை சுற்று தண்ணீர் மட்டுமே வழங்க இயலும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டோம்.தொகுப்பு அணைகளில் தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீரை கணக்கிட்டு, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு ஐந்து சுற்றுகள் தண்ணீர் வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே, மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு வரும், 11ம் தேதி முதல் ஐந்து சுற்றுகள் தண்ணீர் வழங்க அரசாணை பெற்று தர வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், வரும், 11ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு உத்தரவு கிடைத்ததும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE