பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கழிவுகளை கொட்ட வந்த லாரிகளை, கிராம மக்கள் சிறைபிடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி - தாராபுரம் ரோடு, அனுப்பர்பாளையம் அருகே நேற்று காலை, 9:00 மணிக்கு லாரிகளில் கழிவு மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை, சிலர் கொட்டினர். அப்போது, லாரியில் இருந்து கழிவுகளை கீழே கொட்டும் போது, லாரியின் இன்ஜின் பகுதி மேல் நோக்கி நின்றது.அதிர்ச்சிடையந்த பழநியை சேர்ந்த லாரி டிரைவர் வேலுசாமி,62, உடனடியாக லாவகமாக கீழே இறங்கினார். அவ்வழியாக வந்த கிராம மக்கள், கழிவு கொட்ட வந்த லாரி மேல்நோக்கி நிற்பதை கண்டனர். மேலும், லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி - தாராபுரம் ரோடு அனுப்பர்பாளையம் அருகே, ரோட்டோரம் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கிறோம். இந்நிலையில், கழிவுகளை வீசிச் செல்வது தொடர்கதையாக உள்ளது. பிளாஸ்டிக், பயன்படுத்தப்பட்ட ஓட்டல் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் வீசப்படுகின்றன. இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து வீசிச் செல்கின்றனர். இந்நிலையில், மூன்று லாரிகளில் கழிவு மண்ணுடன், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிச் செல்ல கொண்டு வரப்பட்டது. லாரி டிரைவர்களிடம் விசாரித்தால், பொள்ளாச்சி நகரப்பகுதியில் ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட கழிவுகள் என கூறுகின்றனர்.நகரப்பகுதி கழிவுகளை, அங்கேயே அப்புறப்படுத்தாமல், கிராமப்புற பகுதியில் கொட்டுவது வேதனையாக உள்ளது. இதனால், வாகனங்களை சிறைபிடித்துள்ளோம். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த நெகமம் போலீசாரிடம், 'பொள்ளாச்சி - தாராபுரம் ரோட்டில் கழிவுகளை கொட்டாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பிடிக்கப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என மக்கள் வலியுறுத்தினர்.இதற்கு, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என போலீசார் உறுதியளித்த பின், கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த லாரி டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.போலீசார் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, லாரி டிரைவர்கள் வேலுசாமி, வடிவேல், சிவக்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE