மேட்டுப்பாளையம்:''பல ஆண்டுகளுக்கு பலன் தரும் பனைமர நாற்றுகளை, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நடவு செய்ய வேண்டும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும்,'' என, சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார்.காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அர்ச்சனா அவென்யூவில், இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், ஊராட்சியின் சார்பில், நர்சரி அமைத்து, அதில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட, பல வகையான மரம், செடிகள் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஊராட்சி பகுதியில் பனைமர நாற்றுகளை நடவு செய்ய, பனங்கொட்டைகள் பதியம் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து, சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறியதாவது:ஒரு பனை மரத்தில் இருந்து ஓலை, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகிய பொருட்கள் கிடைக்கின்றன. வீடு கட்டுவதற்கு ஓலையும், மற்ற பொருட்கள் அனைத்தும் சாப்பிடுவதற்கும் பயன்படுகின்றன. ஒரு பனைமரம் பல வகையில், பல ஆண்டுகளுக்கு நமக்கு பலனளிக்கும்.மேலும் அதிக இடங்களில் பனை மரங்கள் இருந்தால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது தவிர்க்கப்படும்.கடந்தாண்டில், ஊராட்சியில் உள்ள, 20 கிராமங்களில், 10 ஆயிரம் பனங்கொட்டைகள் நடப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பனங்கொட்டையிலிருந்து, 3 குருத்துக்கள் வந்துள்ளன. மேலும் ஊராட்சியில் உள்ள மயானங்கள், சாலையோரங்களில் நடவு செய்ய, நர்சரியில், 2,000 பனங்கொட்டைகள் பதியம் போடப்பட்டுள்ளன.பனங்கொட்டையில் குருத்து நன்கு முளைத்தவுடன், எடுத்து நடவு செய்யப்படும். இதேபோன்று ஒவ்வொரு ஊராட்சியிலும், காலியிடங்களில் பனைமர நாற்றுகளை நடவு செய்தால், எதிர்கால சந்ததியினருக்கு பலன் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE