வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்கும் விழா, மிகவும் எளிமையாக நடக்க உள்ளது. பாரம்பரிய, ராணுவ அணிவகுப்பு நடக்கும்.

பொது மக்கள் வீடுகளில் இருந்தே நிகழ்ச்சிகளை பார்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த, ஜோ பைடன் வென்றார். வரும், 20ம் தேதி, அவர் முறைப்படி பதவியேற்க உள்ளார். அவருடன், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்க உள்ளார்.'கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பதவியேற்பு விழா மிகவும் எளிமையாக இருக்கும்' என, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வரும், அரசு சாரா அமைப்பான, பி.ஐ.சி., எனப்படும், அதிபர் பதவியேற்பு குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.


'அதிபர் பதவியேற்பு விழாவின்போது, வழக்கமான, பாரம்பரிய ராணுவ அணிவகுப்பு மரியாதை நடக்கும்' என, அந்த அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:பதவியேற்பு விழாவின்போது, முப்படைகளின் தலைவரான அதிபரிடம், அதிகாரத்தை ஒப்படைக்கும் வகையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடக்கும்.பதவியேற்பு விழாவுக்கு பின், வெள்ளை மாளிகைக்கு ராணுவ பாதுகாப்புடன், அதிபர் அழைத்துச் செல்லப்படுவார். அதே நேரத்தில், பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. வீடுகளில் இருந்தே நிகழ்ச்சிகளை பார்க்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
சபாநாயகராக பலோசி மீண்டும் தேர்வு : அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, மூத்த உறுப்பினரான, நான்சி பலோசி, 80, நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சபாநாயகரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பில், நான்சி பலோசிக்கு, 216 ஓட்டுகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்திக்கு, 209 பேர் ஓட்டளித்தனர். நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெற்றவர் பலோசி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE