கடந்த 2011ம் ஆண்டு வீசிய 'தானே' புயலினால் கடலுார் மாவட்டம் முழுதும் 25 ஆயிரம் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், ெஹச்.டி., துணை மின் நிலைய உயரழுத்த கோபுரங்கள் சாய்ந்து மாவட்டமே இருளில் மூழ்கியது.
மாவட்டத் தலைநகரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திலும் மின்சாரம் இல்லாதால் அரசுக்கு தகவல் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.இந்த அவலம் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதாலும், இயற்கை சீற்றங்கள் அடிக்கடி பாதிக்கக்கூடிய கடலோர மாவட்டங்களான கடலுார், நாகப்பட்டினத்தில் பூமிக்கடியில் மின்சார கேபிள் புதைப்பதற்காக உலக வங்கி உதவியுடன் 800 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது.அதன்படி கடலுார் மாவட்டத்தில் கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் மூலம் 347 கோடி ரூபாய் மதிப்பில் 'எல் அண்டு டி' கம்பெனிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது.இப்பணி 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டது. இதில் 3ம் தொகுப்பில் கடந்த ஏப்ரல் 2018ம் ஆண்டு பணி துவங்கி இதுவரை 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.தொகுப்பு 2ன் பணிகள் ஜனவரி 2019ல் துவங்கி இதுவரை 88 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.கடலுார், மஞ்சக்குப்பம், கோண்டூர், தாழங்குடா, தேவனாம்பட்டிணம், கடலுார் புதுநகர், சுத்துக்குளம், கடலுார் முதுநகர், கேப்பர்மலை ஆகிய பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.1ம் தொகுப்பு பணிகள் பஸ் நிலையம் அதைச் சுற்றியுள்ள பகுதி என்பதால் போக்குவரத்து இடையூறு இருக்கும் என்கிற காரணத்தால் இதுவரை டெண்டர் விடப்படவில்லை.ஏற்கனவே பணிகள் துவக்கப்பட்ட தொகுப்பு 3, 2ம் நிறைவடைந்த பகுதிகளுக்கு வீட்டிற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டு விட்டது.
சுனாமி காலனி, சுத்துக்குளம், ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 5000 வீடுகளுக்கு கேபிள் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு தொகுப்பிலும் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் 1ம் தொகுப்பு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும்.இதற்கிடையே 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் சேதங்களை பார்வையிட வருகை தந்த அமைச்சர் தங்கமணி புதைவட கேபிள் நடந்து பணிகள் யாவும் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து சுறுசுறுப்படைந்த மின்வாரியம் ஒப்பந்ததாரர்களை முடுக்கிவிட்டு பணிகளை நிறைவேற்றியுள்ளது.தற்போது பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மின்சார கேபிளில் சோதனை ஓட்டமாக மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது, புதைவட கேபிள் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மின்கம்பம் வழியாகவும் மின்சாம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த 2 வழிகளிலும் மின்சாரம் வழங்கும் சோதனை ஓட்டம் 3 மாதங்கள் வரை தொடரும் எனவும், நகராட்சியிடம் அனுமதி பெறாமல் பொதுமக்கள் தெருக்களில் பள்ளம் தோண்டக்கூடாது எனவும் மின்வாரிய பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE