ரங்கநாத சர்மா, ஹிந்துஸ்தானி ராகங்களுக்கு இணையான, மற்றும் இரண்டு முறைகளிலும், அனேகமாக ஒரே ஸ்வரங்கள் உடைய ராகங்களை பற்றிய, சிறிய அறிமுகத்திற்குப் பின், பேராசிரியர் டி.ஆர்.எஸ்.,சின் 'ஹமீர்கல்யாணி' ராக வர்ணத்துடன் கச்சேரியைத் துவங்கினார்.'வலஜி' ராகத்தை ஹிந்துஸ்தானி இசை முறையில், 'கலாவதி' என்ற ராகத்திற்கு இணையாக, சில மாறுபாடுகளுடன், கர்நாடக இசையில் இயற்றப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, ஹரிகேசநல்லுார் முத்தையா பாகவதரின், 'ஜாலந்தர...' என்ற பாடலைப் பாடி, கற்பனை ஸ்வரங்களில், அந்த ராகத்தின் அழகை வெளிக்கொணர்ந்தார்.கர்நாடக இசையில், 'ஹம்சாநந்தி' ராகம், ஹிந்துஸ்தானியின் ஸோஹினி என்ற ராகத்தைத் தொட்டு அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டி, ராக ஆலாபனையைத் துவங்கினார்.இரண்டு இசை முறைகளின் பிடிகளையும் மாற்றி மாற்றியும், அவ்வப்போது ஒருங்கே சேர்த்தும் பாடியதால், ராகத்தின் சொரூபம் மிக அழகாக வெளிப்பட்டது. முத்தையா பாகவதரின் அதிகம் கேட்டிராத, 'ஸசாமர ரமா வாணி...' என்ற பாடல் வந்தது.ஹிந்துஸ்தானி பாணியில், சில அழகான சங்கதிகள், பல்லவி வரியில் நெரவல், விரிவாக அடுக்கடுக்காய் ஸ்வரக் கற்பனைகள் என அமைத்து முகட்டில் தனி ஆவர்த்தனத்திற்கு வழி.மிருதங்கத்தில் சேர்த்தலை கிருஷ்ணகுமார் தன் மிருதுவான வாசிப்பில், பல இடங்களில் ஹிந்துஸ்தானி இசையின் தபலா ஒலியை நினைவுப்படுத்தினார். மஞ்சூர் உன்னிகிருஷ்ணன் கடவாத்தியத்தில் அவருக்கு இணையாகத் தொடர்ந்தார். தனியில் இருவரும், பல தருணங்களில், 'பலே' போட வைத்தனர்.ராகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சியில், வயலின் வாசிப்பிற்கு நிறைய சந்தர்ப்பங்களைக் கொடுத்தது சிறப்பு.திருவிழா விஜு ஆனந்த், தன் பங்கை வயலினில் ராகங்களின் ஹிந்துஸ்தானி வழி முறையை அளவோடு காண்பித்து, கர்நாடக இசைப் பாணியில் அளித்தது வெகு சிறப்பு. குறிப்பாக ஹம்சாநந்தி மற்றும் பஹாடி ராகத்தையும் திறம்பட வழங்கினார்.தொடர்ந்து, குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் குருந்து, 'செடியாய வல்வினைகள்' எனும் பாசுரத்தை விருத்தமாக அமைத்து, 'முரளீதரா கோபாலா...' என்ற பெரியசாமித் துாரனின் மாண்ட் ராகப் பாடலைப் பாடினார். ராஜஸ்தானின் நாட்டுப்புற இசையிலிருந்து வந்ததாகக் கருதப்படும் இந்த ராகம், திரையிசையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்வாதித் திருநாளின், 'பஜ பஜ மானஸ...' என்று பிரபலமான, 'சிந்துபைரவி' ராக பஜன் அடுத்தது. நிறைவாக மிகவும் அழகான பஹாடி. சிறிய ஆலாபனையில், ராகத்தின் சாற்றைப் பிழிந்து கொடுத்து, வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் தில்லானாவை பாடிய விதமும், வயலினில் விஜு இசைத்த விதமும், மனதைக் கவர்ந்தது.நிகழ்ச்சியில் அனைத்துப் பாடல்களும், சங்கீத மும்மூர்த்திகளின் காலத்திற்குப் பிறகு வந்த வாக்கேயக்காரர்களால் இயற்றப்பட்டவை.ஹிந்துஸ்தானி ராகங்களில், தீக்ஷிதர் பல கீர்த்தனைகளையும், தியாகராஜரும் பிருந்தாவன சாரங்கா போன்ற ராகங்களைக் கையாண்டிருக்கின்றனர். இவர்களின், ஒன்றிரண்டு கீர்த்தனைகளை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளாதது, ஒரு குறை தான்.நிகழ்ச்சி, பார்த்தசாரதி சுவாமி சபா & கர்நாடிகா குளோபல் மூலம் 'ஆன்லைன்' வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE