கோயம்பேடு; போக்குவரத்து போலீஸ் போல் நடித்து, லாரி ஓட்டுனரிடம் பணம் பறிக்க முயன்றவரை, பொதுமக்கள், 'நையப்புடைத்து' போலீசில் ஒப்படைத்தனர்.நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மாதவன், 40; லாரி ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, டைல்ஸ் ஏற்றிக் கொண்டு, கோயம்பேடு, 100 அடி சாலையில், லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது, மர்மநபர் ஒருவர், லாரியை மடக்கி உள்ளார்.பின், அந்த நபர், தான் கோயம்பேடு போக்குவரத்து எஸ்.ஐ., என, அறிமுகப்படுத்திக் கொண்டு, லாரியின் ஆவணங்களை கேட்டுள்ளார்.ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தபோதும், அந்த நபர், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், சந்தேகமடைந்த மாதவன், பொதுமக்கள் உதவியை நாடினார்.உடனே, பொதுமக்கள், எஸ்.ஐ., என்பதற்கான அடையாள அட்டையை காண்பிக்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அந்த நபர், அடையாள அட்டையை காண்பிக்காதது மட்டுமின்றி, தப்பிச் செல்ல முயன்றார்.'வழிப்பறி திருடன்' என்பதை அறிந்து கொண்ட பொதுமக்கள், அவரை நையப்புடைத்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், வடபழநியைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுனரான ராஜேஷ், 28, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE