அறுபடை வீடுகளில் மூன்றாம் வீட்டை கொண்டவர் பழநி முருகன். அவரை தரிசிக்க திண்டுக்கல் வழியாக செல்வோர் எவரும் குழந்தை வேலப்பரை கவனிக்காமல் செல்வதில்லை. 'மிட்டாய் முருகன்' என செல்லமாக அழைக்கப்படும் இந்த குழந்தை வேலப்பரும், அருகேயுள்ள மலையின் வரலாறும் ஆன்மிக நாட்டமுள்ளோரை ஆர்வப்படுத்தக் கூடியது என்றே கூறலாம்.
குழந்தை வேலப்பர்
திண்டுக்கல் - பழநி இடையே ஒட்டன்சத்திரத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது குழந்தை வேலப்பர் கோயில். கருவறையில் குழந்தை வடிவில் வேலுடன் முருகன் இருப்பதால் 'குழந்தை வேலப்பர்' என பெயராயிற்று. பழநி பாதயாத்திரை பக்தர்கள் இவரை தரிசித்து, 'மிட்டாய்' வழங்கிய பின்பே பயணத்தைத் தொடர்வர். இதற்காகவே இந்நாட்களில் கோயிலைச் சுற்றிலும் ஏகப்பட்ட மிட்டாய் கடைகள் முளைத்திருப்பதை காணலாம்.

குழந்தையான வேலப்பர் அல்லவா? எனவே திருமணம், குழந்தை வரம் என எந்த வேண்டுதலோடும் வருபவர்கள் வேலப்பருக்கு 'மிட்டாய்'யை நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர். முருகனுக்கு உகந்த செவ்வாயன்று, செந்நிற வஸ்திரம், செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வைப்பர். மிட்டாய் அல்லது சாக்லேட் சமர்பித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்புகின்றனர். அருணகிரிநாதர் வணங்கிய தலம் என்ற பெருமை கொண்டது இக்கோயில்.
மூலிகை மலை
கோயிலுக்கு பின்புறம் பழநி மலையைப் போன்றே மூலிகை மரங்கள் நிறைந்த மலை ஒன்று இருக்கிறது. இங்கும் ஒரு கோயில் உள்ளது. மலைமீது தான் பழநி முருகனைப் போல குழந்தை வேலப்பர் இருந்ததாக கூறுகின்றனர். பழங்கால சிலை ஒன்று மலைக் கோயிலில் இருந்துள்ளது. சிதிலமடைந்த அச்சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை கும்பாபிேஷகம் நடக்கவில்லை.

பழநி மலைக்கு இணையாக, அதேபோன்ற அமைப்புடன் உள்ளது இதன் தனிச் சிறப்பு. மலைமேல் செல்லும் பாதை மோசமாக இருக்கிறது. இம்மலையை மேற்கிலிருந்து பார்த்தால் பழநி மலைப் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் சிவலிங்கம் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலை போன்றும் தெரியும்.மலையைச் சுற்றிலும் ஏராளமான மூலிகை மரங்கள், செடிகள் நிறைந்துள்ளன. அவற்றில் பல ஆக்கிரமித்துள்ளவர்களால் அகற்றப்பட்டுள்ளன.
மலையைச் சுற்றிலும் குகைகள் பல உள்ளன. அனைத்தும் இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ அடைக்கப்பட்டுள்ளது. இவை சித்தர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை காட்டுகின்றன. பழநி வரும் 90 சதவீத பக்தர்கள் கீழே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலுக்குச் செல்கின்றனரே தவிர, பல ரகசியங்களை கொண்ட மூலிகை மலைக்கு செல்வதில்லை.
கிரிவலம்
மலையைச் சுற்றியுள்ள இடத்தில் பல ஆக்கிரமிப்புகள் இருந்தன. இவற்றை 'விழுதுகள்' எனும் தொண்டு நிறுவனத்தினர் சட்டரீதியாக போராடி மீட்டுள்ளனர். தற்போது கிரிவலம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்மிக விரும்பிகள், தன்னார்வலர்கள் இணைந்து நிதியை தயார் செய்து விழுதுகள் அமைப்பின் மூலம் சரிசெய்து வருகின்றனர். கிரிவலம் அமைந்தபின், இங்குள்ள மூலிகை மரங்களின் காற்றே பல நோய்களை தீர்க்க வல்லமையுடையதை பொதுமக்கள் உணர்வர்.

கிரிவலம் அமைத்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரிய வகை மரஞ்செடி கொடிகளை சேகரித்து சுற்றிலும் நடுவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. அங்கு பறவைகள் தணணீர் அருந்துவதற்காக தண்ணீர் தேக்க 2 சிறிய குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கிரிவலப் பாதையை முறையாக சீர்செய்தால் பழநி மலை, சித்தர் நத்தம் சிவன்மலை போல இதுவும் பக்தர்களின் ஆன்மிக தலங்களில் இதுவும் முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

மூலிகை கன்றுகள் நடுவதற்கு திட்டம்
விழுதுகள் அமைப்பின் பொறுப்பாளர் குப்புசாமி கூறியதாவது: குழந்தை வேலப்பர் மலையில் அதிக மரங்கள் நிறைந்திருந்தது. சில வருடங்களாக மரங்களின்றி காணப்படுகிறது. எக்காலத்திலும் மரங்களை வெட்டாத வகையில் இதுபோன்ற மலைப்பகுதிகளில் கன்றுகளை நடவு செய்தால் பாதுகாக்கப்படும். மூன்று கி.மீ., சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையச் சுற்றிலும் 40 ஆயிரம் மூலிகை மரங்கள் நடவு செய்ய ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் நர்சரி அமைத்து உற்பத்தி செய்துள்ளோம். வருவாய் துறை மூலம் அளவீட்டு பணிகள் முடிந்துள்ளது.தற்போது முட்செடிகள் அகற்றப்பட்டு கிரிவலம் அமைக்க தயார் நிலையில் உள்ளது. அடுத்த கட்டமாக மாவட்ட நிர்வாகத்துடன் மரக்கன்றுகளை கிரிவலப் பாதையின் இருபுறமும் நடவு செய்ய உள்ளோம். பின் ஜப்பானின் 'மியாவாக்கி' முறையில் அடர்வனம் உருவாக்க உள்ளோம். பலர் சாலை ஓரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அதற்கு பதில் கிரிவலப்பாதையில் நடைபயிற்சி செய்வது பாதுகாப்பாக இருக்கும். மூலிகைகளால் உடல் நலனும் பேணப்படும்'' என்றார்.
பழநி மலைக்கு நிகரானது
உறுப்பினர் ராமர் கூறியதாவது: இம்மலையும் பழநி மலைக்கு இணையான காலத்தைச் சேர்ந்தது. மேற்கே பழநி மலையை நோக்கியவாறு முருகன் குழந்தை வேலப்பராக நிற்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கி இருந்த அகதிகள் மலையின் மீது இருந்த சிலையை சேதப்படுத்தி விட்டனர். அதை புதுப்பித்தபின்னும் கும்பாபிேஷகம் நடக்கவில்லை. பக்தர்கள் சென்று வர படிப்பாதை அமைக்க வேண்டும். பழநி போல் இங்கும் கால பூஜைகள் நடத்த வேண்டும். சமூக விரோத செயல்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், என்றார்.
தி.ஆறுமுகப்பாண்டிபடம்: கே.மணிகண்டன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE