மதுரை : ''ஜல்லிக்கட்டில் காலை 8:00 முதல் மதியம் 3:00 மணி வரை காளைகள் அவிழ்த்து விடப்படும். அரசு உத்தரவின்படி 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்,'' என, மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
தை பொங்கலையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜன., 14, பாலமேட்டில் ஜன., 15, அலங்காநல்லுாரில் ஜன., 16 ல் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., மாணிக்கம், எஸ்.பி., சுஜீத்குமார், டி.ஆர்.ஒ., செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், ஆர்.டி.ஒ., முருகானந்தம், கலெக்டர் அலுவலக மேலாளர்கள் சிவபாலன், ராஜேந்திரன், ஜல்லிக்கட்டு விழா கமிட்டி குழுவினர் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டில் கூடுதல் காளைகளை அவிழ்த்து விட ஏதுவாக கூடுதல் நேரம் மற்றும் கூடுதல் மாடுபிடி வீரர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.பின் கலெக்டர் பேசியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள், காளை உரிமையாளர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தொற்று இல்லாதவர்கள் மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். பரிசோதனை ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி காலை 8:00 முதல் மதியம் 3:00 மணி வரை மட்டும் ஜல்லிக்கட்டில் காளைகள் அவிழ்த்து விடப்படும். கூடுதல் நேரம் அனுமதிப்பது குறித்து அன்றைய தினம் முடிவு செய்யப்படும். 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். அவர்கள் 50 பேர் வீதம் ஆறு சுற்றுகளாக களம் இறக்கப்படுவர்.
வருவாய், கால்நடை பராமரிப்பு, போலீஸ் மற்றும் விழா கமிட்டியினர் கொண்ட குழுவினர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வழங்குவர். இதுகுறித்து விரிவான விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். முககவசம், கிருமிநாசினி போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE