திருவனந்தபுரம் : கேரளாவில், திடீரென பரவி வரும் பறவைக் காய்ச்சலைத் தடுக்க, 36 ஆயிரம் வாத்துகளை கொல்வது என, அம்மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

கேரளாவில், சமீபத்தில், ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள் மர்மமாக இறந்து கிடந்தன. அவற்றில் சில வாத்துகளை பரிசோதித்ததில், ஐந்து வாத்துகள், பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் 'எச்5என்8' வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறவைச் காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க, சுற்றுப் பகுதிகளில் இருந்த, 12 ஆயிரம் வாத்துகள் கொல்லப்பட்டன. மேலும், 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, கேரள அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாத்துகளால், மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே, தகவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, பறவைக் காய்ச்சலால் இறப்புகள் நிகழும் பகுதிகளில், மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதையடுத்து, மர்மமான முறையில் பறவைகள் இறக்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதித்துள்ள மாநில அரசுகள், சுற்றுப் பகுதிகளில் உள்ள பறவைகளை அழிக்கவும் உத்தரவிட்டு உள்ளன.
பள்ளிகளுக்கு கிருமிநாசினி : கேரளாவில், பொதுத் துறையைச் சேர்ந்த, கே.எஸ்.டி.பி., நிறுவனம், 4,402 பள்ளிகளில் விநியோகிக்க, 83 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினியை தயாரித்துள்ளது. ஏற்கனவே, திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில், அரசு பள்ளிகளில், கிருமி நாசினி வழங்கும் பணி துவங்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE