'கும்மி' பின்னணி!சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், வலசகல்பட்டி மலை கிராமத்தில், மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற, சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷிணிக்கு, மலைவாழ் மக்கள், தங்கள் பாரம்பரிய நடனம் ஆடி, கும்மி அடித்து வரவேற்பு அளித்தனர்.

கும்மி நடனமாம் !
கிராம சபை நடத்த வந்தவருக்கு, எதற்கு இப்படி ஒரு வரவேற்பு என, கட்சியினர் விசாரித்தனர். மலை வாழ் மாணவ - மாணவியர், 'ஆன்லைனில்' படிக்க, மொபைல் போன் கோபுர வசதி இல்லை. இதனால், தனியார் மொபைல் நிறுவன அதிகாரிகளிடம் பேசி, அங்கு கோபுரம் அமைக்க, ரேகா ஏற்பாடு செய்தார். அதிகாரிகள் ஆய்வு நடத்தியதற்கான மகிழ்ச்சியை தெரிவிக்கவே, கும்மி நடனமாம். அமைச்சர்களுக்கு 'ஆப்பு'தி.மு.க., தலைவர் ஸ்டாலினை ஒருமையில் பேசியும், குடும்ப உறுப்பினர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிற, அமைச்சர்கள் நான்கு பேர் மட்டும் வெற்றி பெறக் கூடாது என, சபதம் எடுத்துள்ளனராம், தி.மு.க.,வினர்.
அந்த நான்கு அமைச்சர்களுக்கும் நெருக்கடி கொடுக்க, பண வசதி மற்றும் தொகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற வேட்பாளர்களை, ஸ்டாலின் தேர்ந்தெடுத்துள்ளாராம். அந்த நான்கு அமைச்சர்களில் ஒருவரை மட்டும், தி.மு.க., சார்பில், 'மாஜி' அமைச்சர் எதிர்த்து போட்டியிடுவாராம். மற்ற மூன்று அமைச்சர்களுக்கும் எதிராக, புதுமுகங்கள் தான் போட்டியிடுகின்றனராம்.கட்சி நிலம் 'ஸ்வாஹா!'ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் கட்ட, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, கலெக்டர் ஆபீஸ் அருகில், இடம் வாங்கி வைத்திருந்தனர்.
தனிச் சின்னத்தில் தான் போட்டி
தற்போதைய மாவட்ட நிர்வாகி ஒருவர், அந்த நிலத்தை விற்று, ஏப்பம் விட்டு விட்டார் என, கட்சி தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.புகாரை விசாரிக்க, ராஜ்யசபா எம்.பி., ஒருவரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலம் விற்றது உண்மையா, பொய்யா என, தெரிய வந்தால் தான், மாவட்ட நிர்வாகியின் பதவி நீடிக்குமா, பறிபோகுமா என்பது தெரிய வருமாம்.தனி சின்னம் ஏன்?தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற சில கட்சிகள், 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்; தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' எனக் கூறி வருகின்றன. தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் தான், கட்சி தாவி ஓட முடியாது என, அந்த கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.

அதேபோல், தங்கள் கட்சியின் தொண்டர்களை சமாதானப்படுத்தவும், இதை விட்டால், வேறு வழியில்லை. ஆனால், ஸ்டாலின், எந்த முடிவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதால், 'என்ன நடக்குமோ; ஏது நடக்குமோ தெரியவில்லையே... மூன்றாவது அணி உருவாகி விடுமோ...' என்கிற பயமும், தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இருக்கிறதாம்.
கூட்டணிக்கு 'சீட்'
திருத்தணி சட்டசபை தொகுதியில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வும், ஆளும் கட்சி, 'மாஜி' எம்.பி.,யும் எதிரும், புதிருமாக இருந்து, இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில், தனக்கு தான், 'சீட்' என, இருவரும் சொல்கின்றனர். இரு கோஷ்டிகளாக செயல்படுவதால், கூட்டணி கட்சியான பா.ஜ., அல்லது பா.ம.க.,வுக்கு, தொகுதியை தள்ளிவிடுவர் போல தெரிகிறது.