ஈரோடு: ஈரோடு மாவட்ட, வட்டார வேளாண் விரிவாக்க மைய, உதவி தொழில் நுட்ப மேலாளர் உள்ளிட்ட பணியாளர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து, நேற்று ஒரு நாள் பணி புறக்கணிப்புடன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நாங்கள் குறைந்த ஊதியத்தில் பணி செய்கிறோம். எங்களை இரண்டு யூனியனுக்கு அப்பால், பணி மாறுதல் செய்தனர். இதனால் போக்குவரத்து, உணவு, பெட்ரோல் செலவு கூடுதலாகி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. முன்பு பணி செய்த இடத்திலேயே பணி வழங்க வேண்டும் எனக்கூறி, வேளாண் இயக்குனர், வேளாண் இணை இயக்குனர் போன்றோரிடம் முறையிட்டோம். பலனில்லாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் சங்கம் சார்பில் வழக்கு தொடுத்தோம். இதில், பணிமாறுதல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இயக்குனர், இணை இயக்குனருக்கு இதுகுறித்து தெரிவித்தும், 'தங்கள் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து எவ்வித உத்தரவும் வரவில்லை' எனக்கூறி, பணியிட மாற்றத்தை திரும்ப பெற மறுக்கின்றனர். இதனால், இன்று (நேற்று) ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து, கலெக்டரிடம் முறையிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE