ஈரோடு: ஈரோடு வழியே, பாசஞ்சர் ரயில்களை இயக்க, பயணிகளிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா பீதியால் மார்ச், 24 முதல், பாசஞ்சர் ரயில்கள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அதிகரிக்கப்பட்டு வரும் நிலையிலும், தற்போது வரை சிறப்பு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. பெரும்பாலான ரயில்களில், பொது பெட்டி இல்லை. முன்பதிவு பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகிறது. கொரோனா காலம் என்பதால், பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பொது பெட்டியை தவிர்த்து வருவதாக, ரயில்வே நிர்வாகம் காரணம் கூறுகிறது. இந்நிலையில், அரக்கோணம் - சேலம் இடையே, பாசஞ்சர் ரயில் (மெமூ ரயில்) நாளை முதல், வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படும் என, ரயில்வே அறிவித்துள்ளது. இதிலும் பொது பெட்டி இல்லை. ஆறு பெட்டிகளுடன், அனைத்தும் முன்பதிவு பெட்டிகளே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதேபோல், ஈரோடு வழியாகவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாசஞ்சர் ரயில்களை (மெமூ), விரைவில் இயக்க எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது: திருச்சி, பாலக்காடு, திருநெல்வேலி, கோவை, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட, பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில், கொரோனா பீதியால் மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. இன்று வரை இயக்கப்படாததால், பயணிகள், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது அரக்கோணம் - சேலம் இடையே முன்பதிவு பாசஞ்சர் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதேபோல் ஈரோடு வழியாக சென்று வரும் வகையில், பாசஞ்சர் ரயில் (மெமூ) இயக்க, வேண்டும். இதனால், கொரோனாவால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதித்துள்ள சாமானிய மக்கள் மிகுந்த பயனடைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
'பழைய கட்டணமில்லை': நாளை முதல், சேலம் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் (மெமூ) ரயிலில், வழக்கமான கட்டணம் இருக்காது. பழைய கட்டணம், 100 ரூபாய்; தற்போது, 115 அல்லது, 120 ரூபாயாக இருக்கும் என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE