லண்டன் : பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை, அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை, பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்தது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, 'விக்கிலீக்ஸ்' என்ற இணையதள நிறுவனரான ஜூலியன் அசாஞ்ச், 49, பிற நாட்டு ராணுவ மற்றும் துாதரக ஆவணங்களை உளவு பார்த்து, ரகசிய தகவல்களை வெளியிட்டதாக, 2010ல், அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், அசாஞ்சுக்கு, 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த, 2019ல், பிரிட்டன் போலீசார் அசாஞ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நாட்டின் ரகசியங்களை உளவு பார்த்த குற்றத்துக்காக, அசாஞ்சுக்கு விதிக்கப்பட்டுள்ள, 175 ஆண்டுகள் சிறை தண்டனையை, அவர் அனுபவிக்கும் பொருட்டு, அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி, பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு, மாவட்ட நீதிபதி வனீசா பாராய்ட்சர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ''அசாஞ்ச் கடுமையான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மன நலன் ஆரோக்கியமாக இல்லை. ''இந்த நேரத்தில், அமெரிக்க சிறையில் தனிமைப் படுத்தப்பட்டால், அவர் தற்கொலைக்கு முயற்சிக்க வாய்ப்புள்ளது. எனவே, அவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது,'' என, உத்தரவிட்டார்.
மாவட்ட நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE