காஞ்சிபுரம், கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில், மணிமேகலை காவியத்தின் நாயகி மணிமேகலை அம்மனின் கழுத்தளவு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை வழிபட்டு செல்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் மூலவர், மூலஸ்தான கோவில், 1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பழங்காலத்தில், பனை மரங்களுக்கு, கருக்கு மரம் என்று பெயர். கருக்கினில் அமர்ந்தவள் என்றால் பனைமரத்திற்கு கீழ் உட்கார்ந்தவள் என்பது பொருள். இதுவே அம்மனுக்கு திருப்பெயராக அமைந்தது. காஞ்சி கருக்கினில் அமர்ந்தவள் அம்மன், தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு, மகிஷாசூரனை சம்ஹாரம் செய்து காட்சியளிக்கிறார். சிலப்பதிகார காவியத்தில், கோவலனுக்கும், மாதவிக்கும் மகளாக பிறந்தவள் மணிமேகலை என, குறிப்பிடப்படுகிறது.
கோவலனின் குலதெய்வமான மணிமேகலையின் பெயரையே தன் மகளுக்கு சூட்டினார், மாதவி. தன் பாட்டி சித்ராபதியையும், தாய் மாதவியையும் போல கணிகையாக வாழ மணிமேகலைக்கு விருப்பமில்லாமல், கற்புக்கரசி கண்ணகியை போல் அறவழியில் வாழ்ந்தாள்.தன் குரு, அறவண அடிகள் ஆலோசனைப்படி, காஞ்சிபுரத்தில் உள்ள தெருவில், வீடு வீடாக சென்று அட்சய பாத்திரத்தில் பிச்சை எடுத்து, புத்த துறவியாகவே வாழ்ந்து, காஞ்சியிலேயே மணிமேகலை மறைந்ததாக கூறப்படுகிறது.மணிமேகலை பிச்சை எடுத்த தெரு, இன்றும் அறப்பெருஞ்செல்வி தெரு என அழைக்கப்படுகிறது.
மணிமேகலையின் குரு, அறவண அடிகள் வாழ்ந்த பகுதி, தற்போது அறவணச்சேரி என்கிற அறப்பனஞ்சேரி என அழைக்கப்படுகிறது.கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் மூலவர் சன்னதிக்கு எதிரில், பகவான் பூஷ் பரிஷ புத்தர் சுவாமி, அம்மனுக்கு காவல் தெய்வமான வேதாசலம் சுவாமி, பகவான் தியான புத்தர் சிலை அமைந்துள்ளது.இங்கு, மேற்கு பக்கம் நோக்கி, கைகள் சிதிலமடைந்து கழுத்தளவு உள்ள சிலையின கீழ், மணிமேகலை என, எழுதப்பட்டுள்ளது.இந்த சிலை, மணிமேகலை காப்பியத்தின் நாயகியான மணிமேகலை அம்மனின் சிலையாக இருக்கலாம் என, வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலருக்கு, மணிமேகலையின் வரலாறு குறித்து தெரியாமல் இருந்தாலும், அம்மனாக நினைத்து வணங்கி செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE