நாமக்கல்: தமிழக சிறப்பு காவல்துறை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அறிவுரைப்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 368 தாய் கிராமங்கள் மற்றும், 1,583 குக்கிராமங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குற்றங்கள் சம்பந்தமாக கண்காணிக்க, ஒவ்வொரு கிராமத்திற்கும், தனித்தனியாக, 382 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தங்கள் கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை புள்ளி விபரங்கள், சுற்றுலா தலங்கள், மக்கள் தொகை, மருத்துவமனைகளின் விபரம், முக்கிய நபர்கள், பிரச்னைக்குரிய பகுதிகள், வங்கிகளின் விபரம். 'சிசிடிவி' கேமரா உள்ள விபரம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உட்பட, 108 வகையான விபரங்களை சேகரித்து, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோப்பில் பதிவு செய்ய வேண்டும். ஏதாவது, சட்ட ஒழுங்கு பிரச்னைகளோ அல்லது குற்ற சம்பவங்களோ நிகழ்ந்தால், உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு, நேரடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் எஸ்.பி., சக்தி கணேசன், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் ப.வேலூர் உளிட்ட, நான்கு காவல் உட்கோட்டங்களுக்கும் சென்று, அனைத்து கிராம கண்காணிப்பு காவலர்களையும் நேரில் சந்தித்து, கையேடு அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: வரும் காலங்களில், அனைத்து முக்கிய நிகழ்வுகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் தகவல் கொடுப்பவர்கள் சம்பந்தமான விபரங்கள் உட்பட கோப்பில் உள்ளவாறு, அனைத்து விபரங்களையும், ஒரு வாரத்துக்குள் பூர்த்தி செய்து பராமரிக்க வேண்டும். தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தாய் கிராமம் மற்றும் குக்கிராமங்களில், ஏதாவது குற்ற சம்பவங்கள் நடந்தால், உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., ஆகியோருக்கும் நேரடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE