ஸ்டாலின் வளையக் கூடாது!
வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:--சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வருமுன், தி.மு.க., கூட்டணியில் உள்ள சின்னக் கட்சிகள், 'சீட்' பேரம் பேசுவதற்காக இப்போதே, 'உதார்' விட ஆரம்பித்துள்ளன.தி.மு.க., கூட்டணியில் உள்ள சின்ன கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வந்தன. இப்போது திடீரென, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், ஐ.ஜே.கே., தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர், 'நாங்கள், எங்களின் கட்சி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்' என கொளுத்திப் போட்டுள்ளனர்.அதுவும், ஐ.ஜே.கே., கட்சி கேட்கும், ஆறு தொகுதிகளையும், தி.மு.க., ஒதுக்க வேண்டுமாம்... மறுத்தால், 234 தொகுதிகளிலும், அக்கட்சித் தனித்து போட்டியிடுமாம்.பாரம்பரியமிக்க, தமிழகத்தில் வலுவாக உள்ள, தி.மு.க.,வை, சின்ன சிறு கட்சிகள் எல்லாம் மிரட்டுகின்றன.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'உதயசூரியன் சின்னத்தில் தான், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வேண்டும்; சம்மதித்தால் மட்டும், கூட்டணிக்கு வாருங்கள்' என, திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.தி.மு.க.,வால் தான், அக்கட்சிகள் வெற்றி பெற முடியும். தனித்து நின்றால், டிபாசிட் வாங்கவே திணறும் என்பது அனைவருக்கும் தெரியும். அக்கட்சிகளால், தி.மு.க.,வுக்கு கிடைக்கும் ஓட்டுக்கள் மிக சொற்பமே.அதனால், ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தால், அக்கட்சிகள் அமைதியாகிவிடும்.தேசியக் கட்சியான காங்கிரஸ், 'கொடுக்கிற சீட்களை வாங்கிக் கொள்கிறோம்' என, பெருந்தன்மையுடன் தெரிவித்து விட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியும் கொடுத்து, அவர்கள் கட்சி சின்னத்தையும், தி.மு.க.,வே வளைந்து கொடுக்க வேண்டுமா?வலுவான உட்கட்சி கட்டமைப்பு, மக்கள் செல்வாக்கு இல்லாத சின்ன சின்ன கட்சிகளின் மிரட்டலுக்கு எல்லாம், ஸ்டாலின் வளைந்து கொடுக்கக் கூடாது.
அவரின் பேச்சை ஏற்காதீர்!
எஸ்.செபஸ்டின், சிவகாசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, சென்னையில், தி.மு.க., சார்பில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற, எஸ்ரா சற்குணம், எந்தவொரு பாரம்பரியமிக்க கிறிஸ்துவ சபையையும் சார்ந்தவரல்ல.இவராகவே, இவருக்கென ஒரு சபையை ஆரம்பித்து, தனக்குத் தானே, 'பேராயர்' என்ற பட்டத்தைக் கொடுத்துக் கொண்டவர்.'இயேசு' என்ற பெயரைக் கூறுவோர் எல்லாம், கிறிஸ்துவர் இல்லை. ஒரு பாரம்பரிய சபையில் ஞானஸ்நானம் பெற்று, இறைவனின், 10 கட்டளையை கடைப்பிடித்து, இயேசுவின் நல்வழியில் நடப்பவர் தான், கிறிஸ்துவர்!
சமீபகாலமாக, பை பிளை மனப்பாடம் செய்து, அதிலுள்ள கருத்துக்களை மிக அழகாக பேசக் கற்றவர் எல்லாம், தனியாக ஒரு சபையை ஆரம்பித்து விடுகின்றனர்.வசதியான, 50 குடும்பத்தினரை, தன் சபையில் சேர்த்தால் போதும்; அவர்களின் வியாபாரம் ஜோராக நடக்கும்.மேலும் கிறிஸ்துவ மதத்தை வளர்க்கிறோம் என்றும், ஏழைகளுக்கு உதவுகிறோம் என்றும் கூறி, மேலை நாடுகளில் நிதி உதவி பெற்று, போதகர் பெயரிலேயே இடம் வாங்கி, ஆலயம் கட்டி, கார், பங்களா என, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கின்றனர்.வருமானம், பல கோடி ரூபாயை தாண்டும் போது, பல கல்வி நிறுவனங்கள், தனி தொலைக்காட்சி நிலையங்களையும் ஆரம்பித்து விடுகின்றனர்; சொத்துகள் அனைத்துமே, இவர்களையேச் சாரும். ஆனால் பாரம்பரிய சபையின் சொத்துக்கள் அனைத்துமே, தலைமையின் கீழ், கிறிஸ்துவ மக்களைச் சார்ந்தது, அங்கு யார் வேண்டு மானாலும் கேள்வி கேட்கலாம்.ஆனால், எஸ்ரா சற்குணம் போன்றோர் வைத்துள்ள சபையில், எவரும் கேள்வி கேட்க முடியாது.எனவே தான், மதப் போதகத்தை கைவிட்டு, அரசியல் கட்சியின் பொறுப்பாளர் போல நடந்துக் கொள்கிறார்.
இவரைப் போன்ற போலிக் கிறிஸ்துவர்களால், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கட்சி சாயம் பூசப்படுகிறது.எந்தக் கட்சியையும் சாராமல், நல்லாட்சி கொடுப்போர் யார் என, சிந்தித்து ஓட்டளிக்கும் ஒட்டுமொத்த கிறிஸ்துவருக்கு, இவரைப் போன்றோரால் அவப்பெயர் ஏற்படுகிறது.
எனவே தமிழக மக்கள், இப்படியானவரின் பேச்சை, கிறிஸ்துவரின் குரலாக எடுத்துக்
கொள்ளக் கூடாது.
இந்திராவை மறக்கலாமா?
ரேவதி நவசக்தி சோமு, மூத்த பத்திரிகையாளர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, 1971 டிசம்பரில் நடந்த, இந்தியா -- பாகிஸ்தான் போரில், நாம் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றோம். அதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. கடந்த, 1971 டிச., 16ல், 93 ஆயிரம் வீரர்களுடன், அப்போதைய பாக்., படைத் தளபதி அமிர் அப்துல்லா கான் நியாசி, நம் படைகளிடம் சரணடைந்தார். இரண்டாம் உலக போருக்குப்பின், ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் சரணடைந்தது, இந்தப் போரில் தான் நடந்தது.
இந்தப் போரின் முடிவில், வங்கதேசம் என, தனி நாடு உருவானது.இந்தப் போரின் வெற்றியை, ஒவ்வோர் ஆண்டும், 'விஜய் திவஸ்' எனப்படும் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறோம். தற்போது, 50வது ஆண்டையொட்டி, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், பொன்விழா வெற்றி ஜோதியை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்துள்ளார்.அந்த வரலாற்று நிகழ்வு, இந்தியர் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கிறது. அதற்கு மூல காரணம், அப்போதைய பிரதமர் இந்திரா அல்லவா? ஜான்சி ராணி போல், இந்திரா எடுத்த துணிச்சலான நடவடிக்கையால் தானே, அந்த வெற்றி நமக்கு கிடைத்தது.இந்த நன்நாளில், அவரை நினைவு கூர வேண்டியது, நம் கடமை அல்லவா? ஆனால், பிரதமர் மோடி, அவரது பெயரை ஒப்புக்காக கூட கூறவில்லையே... இது, வருத்தத்தைத் தருகிறது.
கட்சி வேறு; அரசு வேறு என, மோடி செயல்படுகிறார் என, நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மோடி, சராசரி அரசியல்வாதியாக நடந்து கொண்டது, வேதனை அளிக்கிறது.மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் இந்நாட்டில் பிரதமராக துணிச்சலுடன் செயல்பட்டவர். அவரைப் போற்ற வேண்டியது, நம் கடமை. 'விஜய் திவஸ்' பொன்விழா கொண்டாட்டத்தில், முன்னாள் பிரதமர் இந்திராவின் பெயரும் உரக்க உச்சரிக்கப்பட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE