'அழகிரிக்கும், உங்களுக்கும் அது எப்படி தெரிந்தது... எல்லாரும், 'அவர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்' என்கிறீர்களே எப்படி...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி:தி.மு.க., மறைந்த தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.அழகிரி சொன்னது போல, ஸ்டாலினால் எப்போதும் முதல்வர் ஆகவே முடியாது. எப்போதும் அவர், 'வருங்கால முதல்வர்' என்று தான் அழைக்கப்படுவார். இ.பி.எஸ்., தான் அடுத்த முதல்வர்.
'தேர்தலில் எப்படி குளறுபடிகள் செய்யலாம் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளீர்களே...' என, 'பாராட்டத் தோன்றும் வகையில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் பேட்டி: தமிழகத்தில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தால், வீணாக பிரச்னைகள் ஏற்படும். தேர்தல் முடிந்த இடத்திலிருந்து, முடியாத இடத்துக்குச் சென்று, தேர்தல் பணியில் ஈடுபடுவர். எனவே, இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தால், அதை, தி.மு.க., கண்டிப்பாக எதிர்க்கும்.
'நியாயமான கோரிக்கை தான்; தி.மு.க., கேட்காதே; கோர்ட்டுக்கு போய் அனுமதி பெற்று விடுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: தி.மு.க.,வின் மக்கள் கிராம சபை கூட்டத்தில், கேள்வி கேட்ட பெண்ணை தாக்கியது தொடர்பாக, போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியினர், கிராம சபை கூட்டம் நடத்தி, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை உடனே தடுக்க வேண்டும்.
'நிருபர்கள் உங்களிடம் கேட்டால், முதல்வர் கூறியதை கூறுகிறீர்களே, அவ்வளவு அடக்கமாக... தமிழக அமைச்சர்களிலேயே நீங்கள் தான் சொந்தக் கருத்தைக் கூறாத அமைச்சராக இருப்பீர்கள் போல இருக்கிறது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காதி மற்றும் கிராமத்துறை அமைச்சர் பாஸ்கரன் பேச்சு: தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுக்களை கூறுவது வழக்கம் தான். அதற்கான பதிலை முதல்வர் தெரிவித்து வருகிறார். காங்., - தி.மு.க., கூட்டணி உறுதியானவுடன், அ.தி.மு.க., வெற்றி பெறும் என, முதல்வர் தெரிவித்துள்ளார்.
'விவசாய சட்டங்களால் தான், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றனவே...' என, கேட்கத் தோன்றும் வகையில், மாநில பா.ஜ., தலைவர் முருகன் பேச்சு: விவசாயிகள் தற்கொலையை தடுக்கவே, வேளாண் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். வேளாண் சட்டத்துக்கு, விவசாயிகளிடையே ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு நல்லது நடக்கக் கூடாது என்பதற்காக, ஸ்டாலின் இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE