திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் போலீசார் இரவு ரோந்து பணியின்போது ரேஷன் அரிசி கடத்திய லாரியை மடக்கி இரண்டு பேரை கைது செய்தனர்.
திருக்கோவிலுார் டி.எஸ்.பி., ராஜூ மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் குற்றங்களை தடுக்க இரவு நேர ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு பைக் ரோந்து வாகன போலீசார் வீரபத்திரன், கீழத்தாழனுார் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற் கிடமான வகையில் சென்ற டாரஸ் லாரியை மடக்கி சோதனை செய்தனர் . அதில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
போலீசார் லாரியை பறிமுதல் செய்து, திருக்கோவிலுார் காவல் நிலையம் எடுத்து வந்து விசாரித்ததில், முதலுாரைச் சேர்ந்த கண்ணன் மகன் ஏழுமலை, 34; அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது. லாரியை வேலூர், தொட்டபாளையத்தை சேர்ந்த ராஜேஷ் மகன் தீனா, 35; ஓட்டிச் சென்றுள்ளார். சத்துவாச்சாரியைச் சேர்ந்த நடராஜன் மகன் மனோகர், 27; கிளினராக வந்துள்ளார், தீனா தப்பிச் சென்ற நிலையில் ஏழுமலை, மனோகர் இருவரையும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியுடன் விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்யிடம் திருக்கோவிலுார் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE