பாகூர் : தவளக்குப்பம் அருகே வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வழக்கில், தலைமறைவாக இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்துள்ள பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் விஜயன் 25; இவர் தனது நண்பர்களுடன் கடந்த 1ம் தேதி மாலை, பூரணாங்குப்பத்தில் இருந்து புதுக்குப்பம் நோக்கி சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல் ஆயுதங்களுடன் சென்று, விஜயன் மீது பயங்கர தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றது. படுகாயமடைந்த விஜயன் புதுச்சேரி அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தவளக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து குமாரவேலு, ராஜசேகர், அருணாச்சலம், சபரி, பிரவின், ராகவேந்திரன் ஆகியோரை தேடி வந்தனர்.
அந்த கும்பல், பூரணாங்குப்பம் வெண்தாமரை நகரில் காரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கார்கள், 4 பைக்குகள், கத்தி, தடிகள், மொபைல் போன்களை பறிமுதல்செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE