புதுடில்லி:பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில், மேலும், 20 பேருக்கு, அதிக வீரியமுள்ள, உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், அதிக வீரியமுள்ள, உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைஇதையடுத்து, பிரிட்டன் - இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டது. அத்துடன், டிச., 9 - 22 வரை இந்தியா வந்த அனைத்து வெளிநாட்டு பயணியரிடமும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில், கொரோனா பாதிப்பு உள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களிடம் உருமாறிய கொரோனா வைரசை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தோரின் சளி மாதிரிகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு செய்யப் பட்டு வருகின்றன.
இந்த ஆய்வில், மேலும், 20 பேருக்கு, உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இத்தகைய வீரிய வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 58 ஆக உயர்ந்துள்ளது. புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையம், உருமாறிய வைரஸ் மரபணு மூலக்கூறை கண்டுபிடித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் அனைவரும், அந்தந்த மாநில அரசு மருத்துவமனைகளில், தனி அறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தடுப்பு நடவடிக்கை
வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க, அனைத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ், பிரான்ஸ், டென்மார்க், கனடா, ஜப்பான், ஜெர்மனி, லெபனான், சிங்கப்பூர், ஸ்வீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE